
ஜூன் மாத இறுதியில் ஐரோப்பாவின் மேற்குப் பகுதிகளை உலுக்கிய கடும் வெப்ப அலையின் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் 10,000-க்கும் மேற்பட்டோர் அசாதாரணமான முறையில் உயிரிழந்துள்ளனர் என உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ECDC) மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) ஆதரிக்கப்படும் ‘யூரோமோமோ’ (EuroMOMO) வலைப்பின்னல் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், அதாவது 9,000-க்கும் மேற்பட்டோர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
தீவிர வெப்பம் என்பது வெப்பத் தாக்குதலை (heat stroke) உருவாக்குவதுடன், இதயம் மற்றும் சுவாச நோய்களைத் தீவிரப்படுத்துவதன் மூலம் மனித உயிர்களைப் பறிக்கக்கூடியது. இதில் முதியவர்களே அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டென்மார்க் நாட்டின் ‘ஸ்டேட்டன்ஸ் சீரம் இன்ஸ்டிடியூட்’ (Statens Serum Institut) நிறுவனத்தின் தலைமை மருத்துவர் லாஸ் வெஸ்டர்கார்ட் (Lasse Vestergaard), “ஆண்டின் இந்த நேரத்தில் இத்தகைய உயிரிழப்பு அதிகரிப்பு மிகவும் அசாதாரணமானது; இது மிக அதிகம்” எனக் கூறியுள்ளார். மேலும், “இந்த உயர் இறப்பு விகிதத்தை உச்சகட்ட வெப்பத்தைத் தவிர வேறு எதனாலும் விளக்க முடியாது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் இல்லையெனில், ஜூன் மாத இறுதியில் நிலவிய இந்த வெப்ப அலை உருவாவதற்கே வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இத்தகைய காலநிலை மாற்றமே வெப்ப அலைகளை மேலும் தீவிரமாகவும், அடிக்கடி நிகழக்கூடியதாகவும் மாற்றுகிறது.
ஐரோப்பாவின் 27 நாடுகளில் திரட்டப்பட்ட இந்தத் தரவுகள், ஜூன் 22 முதல் 28 வரையிலான வாரத்தில் ஏற்பட்ட அனைத்துக் காரணங்களாலுமான உயிரிழப்புகளையும் உள்ளடக்கியது. குறிப்பாக, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் வெப்ப அலை உச்சத்தில் இருந்தபோது இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. எனினும், அந்த வாரம் பதிவான 10,650 என்ற உயிரிழப்பு எண்ணிக்கைக்கு, கோவிட்-19 போன்ற வேறு எந்த முக்கிய காரணிகளும் காரணமாக இருக்க வாய்ப்பில்லை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடந்த எட்டு வாரங்களாக, ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்பு விகிதம் சராசரி அளவை விட வாரத்திற்கு 500 பேர் குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
யூரோமோமோ அமைப்பு தனிப்பட்ட நாடுகளின் இறப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை என்றாலும், ஜூன் மாத இறுதியில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய இரு நாடுகள் மட்டுமே ‘மிக அதிகப்படியான’ (very high excess) இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
பெல்ஜியத்தின் பொது சுகாதார நிறுவனமான சையன்சானோவின் (Sciensano) தரவுகளின்படி, 2000-ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் பதிவான வெப்ப அலைகளில், இம்முறையே அதிகப்படியான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
திங்கட்கிழமை வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மட்டும் மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெப்ப அலைகளால் 2,700 பேர் உயிரிழந்துள்ளனர்.
இம்பீரியல் காலேஜ் லண்டன், இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் ட்ராபிகல் மெடிசின் ஆகியவற்றின் ஆய்வின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் 42% காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கூடுதல் வெப்பத்தாலேயே நிகழ்ந்துள்ளன.

