ரூ. 100 கோடி இழப்பு..!! இந்திய ரயில்வேயில் நடந்த நூதன திருட்டு அம்பலம்..!! பயணிகளே இப்படி செய்யலாமா?
இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். சாதாரண வகுப்பு தொடங்கி முதல் வகுப்பு வரை அனைத்து விதமான ரயில் பெட்டிகளும் இருக்கின்றன. அந்தந்த பெட்டிகளுக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் மாறுபடும் அதே போல பயணிகளுக்கான வசதிகளும் மாறும்.
இந்திய ரயில்வேயின் ஏசி பெட்டிகளில் பயணிகளுக்கு பெட்ஷீட்கள், போர்வைகள் மற்றும் துண்டு வழங்கப்படுகின்றன. இவை பெருமளவில் பயணிகளால் திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் சுமார் 1.27 கோடி பொருட்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

ஜனவரி 2022 முதல் மே 2026 வரையிலான காலக்கட்டத்தில், நாடு முழுவதும் உள்ள 18 ரயில்வே மண்டலங்களில் 54 பிரிவுகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, குறைந்தது 1.27 கோடி பொருட்கள் திருடப்பட்டுள்ளன. 2022-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2025-ஆம் ஆண்டில் இத்தகைய திருட்டுச் சம்பவங்கள் 56% அதிகரித்துள்ளது.
பயணிகள் எடுத்துச் செல்ல எளிதாக இருப்பதால், துண்டுகளே முதலிடத்தில் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் திருடு போன பொருட்கள்:
துண்டு: 46.54 லட்சம்
பெட்ஷீட்கள்: 41.13 லட்சம்
தலையணை உறைகள்: 23.59 லட்சம்
போர்வைகள்: 12.95 லட்சம்
தலையணைகள்: 2.76 லட்சம்
அதிகபட்சமாக பிகானெர், ராஞ்சி மற்றும் டெல்லி ஆகிய ரயில் பிரிவுகளில் இந்த பொருட்கள் அதிகமாக திருடப்பட்டுள்ளன. குறிப்பாக, பிகானெரில் மட்டும் 25.76 லட்சம் பொருட்கள் காணாமல் போயுள்ளன.
பயணிகள், அந்த பயணத்தின் போது பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் துண்டுகள், படுக்கை விரிப்புகள் உள்ளிட்டவற்றை தங்களுக்கே சொந்தம் என கருதி எடுத்து செல்கின்றனர். இதன் காரணமாக ரயில்வே நிர்வாகத்திற்கு மட்டுமின்றி, ஒப்பந்ததாரர்களுக்கும் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் 104.51 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த இழப்பு தொகையை ரயில்வே நிர்வாகம் ஒப்பந்ததாரர்களிடம் வசூலிக்கிறது. ஒப்பந்ததாரர்கள், அந்தப் பணத்தை தங்கள் பராமரிப்பில் உள்ள ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்துக்கொள்கின்றனர். இந்நிலையில் தான் ரயில்வே நிர்வாகம் பயணம் முடிவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே பயன்படுத்திய துண்டு, படுக்கை விரிப்பு உள்ளிட்டவற்றை ஊழியர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியுள்ளது.ரயில்வே சொத்துக்களை திருடுவது ‘ரயில்வே சொத்து சட்டத்தின்’ கீழ் ஜாமீனில் வர முடியாத குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே ரயில் பயணிகள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
