Last Updated:
இந்தியாவில் சுகாதார சேவைகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசிய அவர், மத்திய அரசு அனைவரின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த உழைத்து வருவதாகக் குறிப்பிட்டார்
சமூகத்தின் கடைக்கோடி நபருக்கும் தரமான மருத்துவ சேவை சென்றடைய வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார். இந்த இலக்கை அடைய அரசும் தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். மகாராஷ்டிராவின் நாசிக்கில் அசோகா சுகாதார நகரத்தை இன்று திறந்து வைத்துப் பேசிய அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்தியாவில் சுகாதார சேவைகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசிய அவர், மத்திய அரசு அனைவரின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்த உழைத்து வருவதாகக் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும், இப்போது யோகா உலகெங்கிலும் உள்ள மக்களின் அன்றாட வாழ்வில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆரோக்கியமான, நோயற்ற வாழ்க்கையை உறுதி செய்ய, யோகாவையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையையும் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் சுகாதார அமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிர்லா கூறினார் . மருத்துவ உட்கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது எனவும், மருத்துவக் கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும், மேலும் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
மகாராஷ்டிர அரசின் உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் சகன் புஜ்பால், ராஜஸ்தான் அரசின் எரிசக்தித் துறை அமைச்சர் ஹிராலால் நகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
Jul 12, 2026 10:19 PM IST


