தலைமை செயலகமாக மாறுகிறதா சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம்??
சென்னை மக்களின் வாழ்வில் நீங்கா இடம் பிடித்த ஒரு இடம் தான் கோயம்பேடு பேருந்து நிலையம். பல்வேறு ஆசைகளோடும் கனவுகளோடும் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர்கள் கால் பதித்த ஒரு இடம். 24 மணி நேரமும் மக்கள் கூட்டமாக நிறைந்து பரபரப்பாக காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம் தற்போது கலையிழந்து காணப்படுகிறது.
கிளாம்பாக்கத்திற்கு பேருந்து நிலையம் மாற்றப்பட்டதை அடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்ட இடத்தில் நூற்றுக்கணக்கான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பொழிவில்லாமல் காணப்படும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புத்துயிர் அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலைய பகுதிக்கு, தமிழக அரசின் தலைமை செயலகத்தை மாற்றுவது குறித்து அரசு மட்டத்தில் தீவிர ஆலோசனைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தலைமை செயலக வளாகத்தில் இடநெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதே இதற்கு முதன்மை காரணமாக சொல்லப்படுகிறது.
தற்போது செயல்பட்டு வரும் தலைமை செயலகத்தில், கோப்புகளை பராமரிப்பதற்கும் அதிகாரிகளின் பணிகளுக்கும் போதிய இடவசதி இல்லை என சொல்லப்படுகிறது. வாகன நிறுத்தும் இடம் இல்லாதது , போக்குவரத்து நெரிசல் என பல பிரச்சினைகள் நிலவுவதால் நிர்வாக பணிகளை சிரமமில்லாமல் முடிக்க புதிய இடத்திற்கு தலைமை செயலகத்தை மாற்றலாம் என்ற யோசனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் அரசின் தேர்வாக கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கிறதாம். கடந்த 2002ஆம் ஆண்டு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. சுமார் 36 ஏக்கர் பரப்பளவில், 103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு ஆசியாவின் பெரிய பேருந்து நிலையம் என்ற சாதனை படைத்தது.
இந்நிலையில் கடந்த திமுக தலைமையிலான ஸ்டாலின் ஆட்சியின் கோயம்பேடு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையம் காலியாக இருக்கிறது. இவ்வளவு பெரிய இடத்தை பயனுள்ளதாக மாற்ற அரசு திட்டமிட்ட நிலையில் தான் தலைமை செயலகத்தையே ஏன் இங்கு மாற்ற கூடாது என்ற யோசனை பிறந்ததாம்.
முந்தைய திமுக அரசு கோயம்பேட்டில் வணிக வளாகம் அமைக்க திட்டமிட்ட நிலையில் அதற்கு மாற்றாக, தலைமை செயலகத்தை கட்டியெழுப்ப விஜய் தலைமையிலான அரசு ஆரம்பகட்ட ஆலோசனைகளை தொடங்கியுள்ளது. கோயம்பேட்டில் ஏற்கனவே விரிவான பேருந்து வசதிகளும், சென்னை மெட்ரோ ரயில் நிலைய வசதியும் இருப்பதால், பொதுமக்கள் , அதிகாரிகள், அலுவலர்கள் வந்து செல்வது மிகவும் எளிதாக இருக்கும் என கருதப்படுகிறது.
350 கோடி ரூபாய் மதிப்பில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை தலைமை செயலகமாக மாற்ற திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது. இந்த திட்டத்திற்கு முதலமைச்சர் இறுதி ஒப்புதல் அளித்து அனுமதி வழங்கும் பட்சத்தில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

