Last Updated:
வெளிநாட்டு பிரான்சிஸ் கிரிக்கெட் லீக் ஒன்று, இந்தியாவில் அதிகாரப்பூர்வ லீக் போட்டி ஒன்றை நடத்துவது கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும்.
ஆஸ்திரேலியாவின் முன்னணி டி20 கிரிக்கெட் தொடரான பிக் பாஷ் லீக் (BBL), தனது வரலாற்றிலேயே முதன்முறையாக ஆஸ்திரேலிய மண்ணைத் தாண்டி வெளிநாடு ஒன்றில் அதிகாரப்பூர்வ போட்டியை நடத்தத் தயாராகி வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 2026-27 சீசனின் தொடக்க ஆட்டத்திற்கு இந்தியாவின் சென்னை சேப்பாக்கம் ஆடுகளமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
வரும் டிசம்பர் 12 அன்று சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், நடப்பு சாம்பியனான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும், வலுவான மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியும் இந்த தொடக்க ஆட்டத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன.
வெளிநாட்டு பிரான்சிஸ் கிரிக்கெட் லீக் ஒன்று, இந்தியாவில் அதிகாரப்பூர்வ லீக் போட்டி ஒன்றை நடத்துவது கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும்.
பிரதமர் நரேந்திர மோடி மெல்போர்ன் நகருக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அரசுமுறைப் பயணத்தின் போது இந்த மெகா அறிவிப்பு வெளியிடப்பட்டது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸுடன் இணைந்து பிரதமர் மோடி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கான விஸ்தாரமான முயற்சிகளின் ஒரு பகுதியாக இப்போட்டி அமையவுள்ளது. இந்த அறிவிப்பின் போது, களம் மற்றும் களம் தாண்டிய அனைத்துத் துறைகளிலும் இரு நாடுகளின் பார்ட்னர்ஷிப் என்பது ஒரு ‘சாம்பியனாக’ உருவெடுக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பானிஸ் பேசுகையில், இந்த விளையாட்டு ஒத்துழைப்பு இரு நாட்டு மக்களையும் மகிழ்விப்பதோடு மட்டுமல்லாமல் வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீடுகளுக்கும் பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று குறிப்பிட்டார்.
சென்னையின் ஆழமான கிரிக்கெட் கலாச்சாரம் மற்றும் ரசிகர்களின் எல்லையற்ற ஆர்வமே தங்களின் முதல் வெளிநாட்டுப் போட்டிக்குச் சென்னையைத் தேர்ந்தெடுக்க முதன்மைக் காரணம் என்று பிபிஎல் தலைவர் அலிஸ்டர் டாப்சன் மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தலைவர் ஜான் ஸ்டீபன்சன் ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். டிக்கெட் விற்பனை போன்ற வணிக ரீதியான முடிவுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும், சென்னை ரசிகர்களிடம் இருந்து மிக பிரம்மாண்டமான வரவேற்பும், மைதானம் நிறைந்த கூட்டமும் இருக்கும் என ஏற்பாட்டாளர்கள் முழுமையாக நம்புகின்றனர்.


