Last Updated:
டிஆர்டிஓ-வின் இந்தத் தயாரிப்பு, இந்தியாவின் பல அடுக்கு நீர்மூழ்கி எதிர்ப்புப் பாதுகாப்புத் திறனை உலகத் தரத்திற்கு உயர்த்தும் என்று பாதுகாப்பு துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய கடல் பகுதிகளில் இந்தியக் கடற்படை 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), SMART (Supersonic Missile-Assisted Release of Torpedo) என்ற அதிநவீன நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுதத்தை உருவாக்கி வருகிறது.
சுமார் 600 கிலோமீட்டருக்கும் (400 மைல்கள்) அதிகமான தூரத்தில் இருக்கும் எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை (Submarines) துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது இந்த அமைப்பு. தற்போது இந்தத் திட்டம் இறுதி கட்ட சோதனைகளுக்குத் தயாராகி வரும் நிலையில், 2031 ஆம் ஆண்டிற்குள் இது அதிகாரப்பூர்வமாக இந்தியக் கடற்படையில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படும் வழக்கமான டார்பிடோக்கள் அதாவது தண்ணீருக்குள் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகள் வேகம் குறைந்தவை மற்றும் மிகக் குறுகிய தூரம் மட்டுமே பாயக்கூடியவை. ஆனால், DRDO உருவாக்கியுள்ள ‘SMART’ என்பது ஒரு தனித்துவமான ஹைப்ரிட் ஆயுதமாகும். இது ஒரு சூப்பர்சோனிக் ஏவுகணையின் வேகத்தையும், இலக்கைத் தேடி அழிக்கும் டார்பிடோ தொழில்நுட்பத்தையும் ஒன்றாக இணைக்கிறது.
50 கிலோ வெடிபொருளைக் சுமந்து செல்லும் இந்த டார்பிடோ, தண்ணீருக்குள் சுமார் 20 கி.மீ தூரம் வரை தானாகவே எதிரிக் கப்பலைத் தேடிச் சென்று அதைத் தகர்க்கிறது.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த ‘SMART’ ஆயுதம் இந்தியாவின் பாதுகாப்பை பல மடங்கு அதிகரிக்கும். இந்த அமைப்பின் மூலம், இந்தியப் போர்க்கப்பல்கள் எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு அருகில் சென்று தங்களை ஆபத்துக்குள்ளாக்கிக் கொள்ளத் தேவையில்லை. பாதுகாப்பான தூரத்திலிருந்தே மிக விரைவாகவும், துல்லியமாகவும் அச்சுறுத்தல்களை முறியடிக்க முடியும்.
டிஆர்டிஓ-வின் இந்தத் தயாரிப்பு, இந்தியாவின் பல அடுக்கு நீர்மூழ்கி எதிர்ப்புப் பாதுகாப்புத் திறனை உலகத் தரத்திற்கு உயர்த்தும் என்று பாதுகாப்பு துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.


