Parandur Airport: அப்பட்டமாக பொய் சொல்லும் நிர்மல்குமார்.. வீடியோ உடன் நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி!
தமிழ்நாடு மற்றும் சென்னையின் அடுத்த கட்ட வளர்ச்சி பரந்தூர் நம்பி தான் உள்ளது என பலரும் கூறி வரும் வேளையில் விஜய் தலைமையிலான அரசு இத்திட்டத்தை முடிக்கியே ஆக வேண்டும் என்ற வகையில் செயல்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாடு மின்சார மற்றும் சட்டதுறை அமைச்சராக இருக்கும் சிடிஆர் நிர்மல் குமார் பேசுகையில், பரந்தூர் விமான நிலைய திட்டம் குறித்து முதல்வர் விஜய் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். முதல்வர் சில முக்கிய அதிகாரிகளுடன் பேசிய போது பரந்தூரில் விமான ஓடுதளம் அமைக்கும் இடத்தில் சுமார் 800 நீர்நிலைகள் இருப்பதால் இப்பகுதியில் ஓடுதளம் அமைக்க முடியாது என கூறினர் என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முடக்கும் முயற்சியில் விஜய் அரசு இறங்கியிருப்பதாகவும், பரந்தூரில் விமான இயக்கத்திற்கு ஓடுதளம் அமைக்க முடியாது என அமைச்சர் நிர்மல்குமார் கூறுவது அப்பட்டமான பொய் என்றும் தெரிவித்தார்.
ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றால் மாநில அரசு தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு முடிவுகளை எடுக்க முடியாது. இந்திய விமான நிலைய ஆணையம், பாதுகாப்பு அமைச்சகம் முதலில் தேர்வு செய்யப்பட்ட இடத்தை விமானத்தின் டேக் ஆப் லேண்டி, விமான இயக்கம், பருவ நிலை பாதிப்பு, சுற்றுசூழல் பாதிப்பு, அருகில் இருக்கும் பகுதிகளின் பாதுகாப்பு என பல காரணிகளை அய்வு செய்து தான் அனுமதி வழங்கப்படும். இப்படி பலக்கட்ட ஆய்வுகளுக்கு பின்பு தான் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுது.
இதை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் அனைத்து காரணிகளையும் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இந்திய விமான நிலைய ஆணையம், பாதுகாப்பு அமைச்சகமும் அனுமதி வழங்கியது விஜய் தலைமையிலான அரசுக்கும், நிர்வாகத்திற்கும் தெரியாதா? என கேட்டார்.
மேலும் தனது எக்ஸ் பதிவில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முடக்கும் முயற்சியில் ஜோசப் விஜய் அரசு இறங்கியிருக்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே தொழில்நுட்ப நிபுணர் குழுக்கள் நீர்நிலைகளைப் பாதுகாத்து ஓடுதளம் அமைப்பதற்கான பொறியியல் தீர்வுகளைப் பரிந்துரைத்திருக்கும்போது, இப்போது திடீரெனப் புதிய சிக்கலை உருவாக்குவது ஏன்? இது உண்மையான தொழில்நுட்பப் பிரச்சினையா? அல்லது உங்கள் கட்சியின் மலிவான ஓட்டு வங்கி அரசியலுக்காக மாநில வளர்ச்சியை பலியிடும் செயலா இது? என்றும் நயினார் நாகேந்திரன் கேட்டுள்ளார்.
நயினார் நாகேந்திரன் தனது பதிவில் இறுதியாக சென்னையின் தற்போதைய விமான நிலையத்தை இட வசதி இல்லாத காரணத்தால் விரிவாக்கம் செய்ய முடியாமல் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தான் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு 2வது விமான நிலையம் உருவாக்கும் திட்டம் கையில் எடுக்கப்பட்டது.
இத்தகைய நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை தாமதப்படுத்துவது தமிழ்நாட்டிற்கான வர்த்தக வாய்ப்புகளை பறித்துவிடும். எனவே, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் காலதாமதமின்றி உடனடியாகத் தொடர மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் தனது பதிவை முடித்தார். இந்த பதிவுடன் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேசிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
அமைச்சர் திரு. நிர்மல் குமாரின் பொய் பிரச்சாரமும், தமிழகத்தின் எதிர்காலத்திற்கு தவெக அரசு செய்யும் துரோகமும்!
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் முட்டுக்கட்டை போடும் வகையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை முடக்கும் முயற்சியில் திரு. ஜோசப்… pic.twitter.com/glRvnm1dm7
— Nainar Nagenthran (@NainarBJP) July 9, 2026 “>

