International
oi-Nantha Kumar R
இஸ்லாமாபாத்: ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு சென்று கொண்டிருந்த சரக்கு விமானம் ஒன்று திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து மாயமானது. அரபிக்கடலில் விமானம் விழுந்து நொறுங்கிய நிலையில் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த விமானத்தில் பயணித்த 5 பேரின் கதி என்ன? என்பது தெரியாத நிலையில் இந்த விபத்து குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. இது பாகிஸ்தானை சேர்ந்த கே2 ஏர்வேஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த போயிங் 737 ரக விமானமாகும். இந்த விமானத்தில் மொத்தம் 5 பேர் பயணித்தனர்.

இந்த விமானம் அரபிக்கடலின் மேல்பகுதியில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானத்தில் ‘நேவிகேஷனல் சிஸ்டம்’ அமைப்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
விமானத்தை எடுத்து கொண்டால் இந்த ‘நேவிகேஷனல் சிஸ்டம்’ மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த அமைப்பு தான் விமானங்களுக்கு வழிகாட்டும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் உடனடியாக விமானிகள் கராச்சியில் உள்ள விமான போக்குவரத்துக்கான கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானத்துக்கு உதவிகள் வழங்கப்பட்டது. கட்டுப்பாட்டு அறையின் உதவியுடன் இந்த விமானம் கராச்சியை நெருங்கிய நிலையில் திடீரென்று ரேடாரில் இருந்து விலகியது. கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் இந்த விமானம் அரபிக்கடலில் விழுந்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
உடனடியாக பாகிஸ்தான் விமான ஆணையம், மீட்பு படையினர், கடற்படையினர் என அனைவரும் அரபிக்கடலில் தீவிரமாக விமானத்தை தேடும் பணியை தொடங்கினர். இந்நிலையில் தான் நேற்று நள்ளிரவில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அந்த சரக்கு விமானம் அரபிக்கடலில் விழுந்து நொறுங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் விமானத்தில் பயணித்த 5 பேரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த விபத்து பற்றி பாகிஸ்தான் விமான ஆணையம் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளது. விபத்து எப்படி நேர்ந்தது என்பது பற்றி அந்த ஆணையம் விவரித்துள்ளது. அதில், ,”ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ‘நேவிகேஷனல் சிஸ்டம்’ பிரச்சனையை எதிர்கொண்டது. இரவு 9.18 மணிக்கு (நேற்று முன்தினம்) கராச்சி விமான கட்டுப்பாட்டு மையம் விமானத்திற்கு வழிகாட்ட தொடங்கியது. ஆனால் 9.21 மணிக்கு விமானத்தின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டது.
விமானம் தனது பயண திசையை மாற்றியதோடு, வேகமாக உயரத்தை குறைக்க தொடங்கியது. கராட்சியில் இருந்து சுமார 287 கிலோமீட்டர் மேற்கு பகுதியை விமானம் அடைந்தபோது ரேடாரில் இருந்து விலகியது. கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு துண்டிக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் ஏற்பட்ட ‘நேவிகேஷனல் சிஸ்டம்’ பிரச்சனையால் விமானம் அரபிக்கடலில் விழுந்து நொறுங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, விமானத்தின் உடைந்த பாகங்கள் அரபிக்கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

