முதலமைச்சர் விஜய்-இன் கரூர் பயணத்தில் இப்படி ஒரு திட்டம் இருக்கா?
தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் கரூர் பயணம் மாநிலம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பு தவெக சார்பில் கரூரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் விஜய் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாடு முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சூழலில் தான் தேர்தல் முடிவுகள் வெளியாகி விஜய் முதலமைச்சராக பதவியேற்று முதன்முறையாக கரூர் செல்கிறார். முதலமைச்சரின் வருகை ஒட்டி கரூர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தன்னுடைய கரூர் பயணத்தின் ஒரு பகுதியாக முதலமைச்சர் விஜய் காலணி உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

கரூரில் எவர்வென் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் (Evervan Kothari Footwear Pvt. Ltd) நிறுவனத்தின் தோல் அல்லாத நவீன காலணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. 1700 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த ஆலைக்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார். இந்த ஆலை மூலம் கரூர் மற்றும் சுற்றுப்புறங்களை சேர்ந்தவர்களுக்கு 13,500 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
ஃபீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வென் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட் நிறுவனம், கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், ரூ.5,000 கோடி முதலீடு மற்றும் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், தோல் அல்லாத காலணி உற்பத்தி ஆலைகளை நிறுவுவதாக கடந்த பிப்ரவரியில் அறிவித்தது. அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் கீழ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் முதல்கட்டமாக கரூர் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

தைவான் நிறுவனத்துடன் இணைந்து லட்சக்கணக்கான காலணிகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காலணி ஆலை மூலம் கரூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் உருவாகும். கரூரின் பொருளாதாரமும் மேம்படும். கரூரில் உற்பத்தி செய்யப்படும் காலணிகள் உலகமெங்கும் பயணிக்க போகின்றன.
முதலமைச்சர் விஜய் தன்னுடைய பயணத்தின் ஒரு பகுதியாக ஆட்சியர் அலுவலகத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார், பின்னர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளார். தொடர்ந்து, வெண்ணெய்மலையில் உள்ள, தனியாருக்கு சொந்தமான, அட்லஸ் கலையரங்க வளாகத்தில், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
இதில், கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 32 பேருக்கு, கருணை அடிப்படையில் அரசு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்க உள்ளார்.முதலமைச்சர் விஜய் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 5,000 பேர் அமரும் வகையில், பிரமாண்ட கூடாரம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

