Last Updated:
போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸும் தனது பதவியிலிருந்து விலகுவதை உறுதி செய்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆப் 16 (சுற்று 16) போட்டியில் ஸ்பெயின் அணியிடம் 1-0 என்ற கணக்கில் தோற்று போர்ச்சுகல் அணி வெளியேறியதைத் தொடர்ந்து, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஆட்டம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனி, ரொனால்டோ மற்றும் அவரது நீண்டகாலப் போட்டியாளரான லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவரையும் ஒப்பிட்டு ஒரு பரபரப்பான கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
அர்ஜென்டினா வீரர்கள் லியோனல் மெஸ்ஸிக்காக களத்தில் ஒன்றுபட்டு விளையாடுவதைப் போல, போர்ச்சுகல் வீரர்கள் ரொனால்டோவுடன் இணைந்து விளையாடுவதை ரசிப்பதாகத் தெரியவில்லை என்று ரூனி குறிப்பிட்டுள்ளார். “மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆகிய இருவருமே கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த வீரர்கள். ஆனால், அர்ஜென்டினா அணியினர் அனைவரும் மெஸ்ஸியின் பின்னால் நின்றுகொண்டு அவருக்காக விளையாடுவது போல் தெரிகிறது. இந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸியின் ஆட்டமும் பிரமாதமாக உள்ளது. ஆனால், போர்ச்சுகல் வீரர்களிடம் இருந்து எனக்கு அந்த மாதிரியான ஒரு நல்ல வைப் தெரியவில்லை” என்று ரூனி ஓப்பனாக விவரித்துள்ளார்.
இந்த உலகக் கோப்பையுடன் தனது சர்வதேச உலகக் கோப்பை பயணம் நிறைவடைகிறது என்பதை 41 வயதான ரொனால்டோ ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தார். ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியில் 90 நிமிடங்களும் முழுமையாக களத்தில் இருந்தபோதிலும், அவரால் வெறும் 19 முறை மட்டுமே பந்தைத் தொட முடிந்தது; அதோடு 3 ஷாட்டுகளை மட்டுமே அடிக்க முடிந்தது.
குரோஷியாவுக்கு எதிரான முந்தைய போட்டியில் வெற்றி இலக்கை அடித்த இளம் வீரர் கோன்சலோ ராமோஸ், இந்தப் போட்டியில் மாற்று வீரராகக் கூட களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் ரொனால்டோ மொத்தம் 3 கோல்களை மட்டுமே அடித்துள்ளார். அதில் இரண்டு உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராகவும், மற்றொன்று குரோஷியாவுக்கு எதிரான பெனால்டி வாய்ப்பின் மூலமும் பெறப்பட்டவை ஆகும். இதற்கு நேர்மாறாக, அர்ஜென்டினாவின் மெஸ்ஸி தனது அணியின் மகுடத்தைத் தக்கவைக்க ஏற்கனவே 7 கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.
போட்டிக்குப் பின் பேசிய ரொனால்டோ, “உலகக் கோப்பையிலிருந்து இந்த முறையில் வெளியேறுவது வருத்தமளிக்கிறது. இருப்பினும் எனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளேன், தெளிவான மனசாட்சியுடன் வெளியேறுகிறேன்” என்று கூறினார். மேலும், போர்ச்சுகல் அணியின் பயிற்சியாளர் ராபர்டோ மார்டினெஸும் தனது பதவியிலிருந்து விலகுவதை உறுதி செய்துள்ளார்.


