Last Updated:
ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் செல்லாது என டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் கமேனிக்கு இறுதி சடங்கு நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தி இருப்பதும், அமைதி ஒப்பந்தம் இனி செல்லாது என அதிபர் டிரம்ப் தெரிவித்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் உள்ள 80-க்கும் மேற்பட்ட இடங்களை ஏவுகணைகள் மூலம் துல்லியமாக தாக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் படை வீடியோ வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ஈரானின் வான் வழி பாதுகாப்பு அமைப்புகள், கடலோர ரேடார் நிலையங்கள், புரட்சிகர காவல் படைக்கு சொந்தமான 60-க்கும் மேற்பட்ட அதிவேக சிறிய படகுகள் தாக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலால் ஈரானின் ஹக்கானி துறைமுகம் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. ஏவுகணை தாக்குதலில் துறைமுகம் தீப்பற்றி எரிந்த காணொளி வெளியாகி உள்ளது. இதற்கு பதிலடி தரும் வகையில், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள 85 அமெரிக்க தளங்கள் மீது ஈரான் புரட்சிகரப் படை தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5 ஆவது கடற்படை தளம், குவைத்தில் உள்ள அலி அல்சலேமின் விமானப்படை தளம் மீது ஈரான் தாக்குதல் தொடுத்துள்ளது.
அண்மையில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த 3 வணிகக் கப்பல்களை ஈரான் தாக்கியதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. குறிப்பாக, மார்ஷல் தீவுகள், சவுதி அரேபியா, லைபீரியா உள்ளிட்ட நாடுகளின் கொடிகளுடன் ஹோர்முஸ் நீரிணையை கடந்த கப்பலை ஈரான் தாக்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
ஈரான், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியது மட்டுமின்றி, சுதந்திரமான கடல் வழி போக்குவரத்தை பாதிக்கும் செயலில் ஈடுபட்டு இருப்பதாக அமெரிக்கா கண்டித்துள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணை அருகே சவுதி, கத்தார் மற்றும் அடையாளம் தெரியாத கப்பல் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியதாக இங்கிலாந்து கடல்வழி போக்குவரத்து அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரான், தாங்கள் எந்த தாக்குதலையும் முன்னெடுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது. இந்நிலையில், ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் இனி செல்லாது” எனத் தெரிவித்துள்ளார்.


