
செ.தி.பெருமாள்
நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ஜோஹன்னஸ் பிரான்சிஸ் அலனின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 14 உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (07) அன்று நடைபெற்ற மாதாந்த சபை அமர்வைப் புறக்கணித்தனர்.
சபை அமர்வின் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்ட போதிலும், உறுப்பினர்கள் சபை மண்டபத்திற்குள் செல்லாமல், மண்டபத்திற்கு முன்னால் நின்றவாறு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். சபையை நடத்துவதற்குத் தேவையான ‘கோரம்’ (குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை) இல்லாத காரணத்தினால், தவிசாளர் சபை அமர்வை இம்மாதம் 21 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
நகர சபை உறுப்பினர் பந்துசிறி ரணவீர உள்ளிட்ட உறுப்பினர்கள் கூறுகையில், “தவிசாளர் எவ்வித முன்மொழிவுகளையும் நடைமுறைப்படுத்துவதில்லை; கடந்த ஒரு வருட காலமாக பிரதேசத்தில் எந்தவித அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுக்கவில்லை” என்று குற்றம் சுமத்தினர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தவிசாளர் ஜோஹன்னஸ் பிரான்சிஸ் அலன், “கோரம் இல்லாத காரணத்தினாலேயே சபை ஒத்திவைக்கப்பட்டது. எனது செயல்பாடுகள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” என்று தெரிவித்தார்.

