(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
2022ஆம் ஆண்டு ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் டத்தோ ஒன் ஹாஃபிஸ் காஸி மந்திரி பெசாராகப் பொறுப்பேற்றதிலிருந்து, அவரது தலைமையிலான ஜோகூர் மாநில அரசு பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும் சாதனைகளையும் பதிவு செய்துள்ளதாக சுல்தானா ரோகையா அறக்கட்டளையின் தலைவர் டத்தோ சுகுமாறன் ராமன் தெரிவித்தார்.


அவர் வெளியிட்ட அறிக்கையில், குறிப்பாக இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்காக கடந்த 4 வருடங்களில் ரிங்கிட் மலேசியா 40.68 மில்லியன் ஒதுக்கப்பட்டு, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஜோகூர் மாநிலத்தில் மூன்று தமிழ்ப்பள்ளிகளுக்கு புதிய இடங்கள் வழங்கப்பட்டதுடன், அவற்றை இடமாற்றம் செய்து மேம்படுத்துவதற்குத் தேவையான நிதியுதவியும் மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இதனுடன், ஜோகூர் மாநில இந்து சமூகத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு 14 இந்துக் கோயில்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டதோடு, அவற்றின் இடமாற்றம் மற்றும் புதிய கட்டுமானப் பணிகளுக்கும் மாநில அரசு ஆதரவு வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், இந்து சமூகத்தின் இருபது ஆண்டுகால நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்த இந்து ஈமச்சடங்கு மையம், பெர்மாஸ் ஜெயா தெலுக் ஜாவாவில் சுமார் ரிங்கிட் மலேசியா 1.93 மில்லியன் செலவில் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹாஃபிஸ் தலைமையிலான மாநில அரசால் அமைக்கப்பட்டு, தற்போது பொதுமக்களின் பயன்பாட்டில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


கடந்த நான்கு ஆண்டுகளில் ‘பந்துவான் காச் ஜோகூர்’ உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களுக்காக மொத்தம் ரிங்கிட் மலேசியா 138 மில்லியன் ஒதுக்கப்பட்டு, ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த உதவிகள் மலாய், சீனர், இந்தியர் என அனைத்து இன, மத மக்களுக்கும் சமமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜோகூர் மாநிலத்தில் வாக்களிக்கும் தகுதியுடைய அனைத்து இந்திய வாக்காளர்களும் வரும் ஜூலை 11, சனிக்கிழமை அன்று நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று டத்தோ சுகுமாறன் ராமன் கேட்டுக் கொண்டார்.

“வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக உரிமையும் பொறுப்பும் ஆகும். எனவே, வாக்களிக்கும் தகுதியுடைய அனைவரும் வீடுகளிலிருந்து வெளியே வந்து தங்களது வாக்கை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக சிங்கப்பூரில் பணியாற்றும் ஜோகூர் இந்தியர்கள், இந்தத் தேர்தலை நமது எதிர்கால வாழ்க்கைத் தரத்தையும் சமூக முன்னேற்றத்தையும் தீர்மானிக்கக்கூடிய முக்கியமான தருணமாகக் கருதி, வரும் சனிக்கிழமை கட்டாயம் வந்து வாக்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இந்தியர்களின் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தால், அது மாநில அரசிடம் நமது சமூகத்தின் தேவைகள் மற்றும் உரிமைகளை வலியுறுத்தும் வலுவான அடித்தளமாக அமையும். என்னுடைய ஆதரவு தேசிய முன்னணிக்கே.


எனவே, அனைவரும் என்னுடன் ஒன்றிணைந்து ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹாஃபிஸுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.



