(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
ஜோகூரில் மக்கள் குடியிருப்புகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்ற பிரதமரின் கருத்துக்கு விளக்கமளித்த ஜோகூர் மாநில பொறுப்பு வீடமைப்பு மற்றும் உள்ராட்சித் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஜஃப்னி ஷூகோர், கடந்த 2022 முதல் 2026ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மக்கள் குடியிருப்புகளின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக மாநில அரசு மொத்தம் 172 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.
இதில், மக்கள் வீட்டுத் திட்டங்கள் (PPR) மற்றும் அரசு வாடகை வீடுகள் (RSK) தொடர்பான பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் வசதி மேம்பாட்டுப் பணிகளுக்காக மட்டும் 122 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 13 மக்கள் வீட்டுத் திட்டங்களும், 7 அரசு வாடகை வீட்டுப் பகுதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், கட்டடங்களுக்கு புதிய வண்ணம் பூசுதல், பழைய மின்தூக்கிகளை மாற்றுதல், குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய் அமைப்புகளைச் சீரமைத்தல், சாலைகள், வடிகால்கள், வாகன நிறுத்துமிடங்களை மேம்படுத்துதல், கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவிகள், தெருவிளக்குகள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.
அத்துடன், தொழுகை மண்டபங்கள், சமூக மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோ ஜஃப்னி ஷூகோர் தெரிவித்தார். செகாமாட், பொந்தியான், கிளுவாங், லார்கின், பாசிர் கூடாங், பத்து பகாட், கெம்பாஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகள் மூலம் சுமார் 15 ஆயிரம் வீட்டு அலகுகளும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களும் பயனடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மக்கள் வீட்டுத் திட்டங்கள் மற்றும் அரசு வாடகை வீடுகளுக்கான வாடகை வசூலும் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 2022ஆம் ஆண்டில் 6.9 மில்லியன் ரிங்கிட்டாக இருந்த வசூல், 2023ஆம் ஆண்டில் 24.4 மில்லியன் ரிங்கிட்டாகவும், 2024ஆம் ஆண்டில் 26.4 மில்லியன் ரிங்கிட்டாகவும், 2025ஆம் ஆண்டில் 28.4 மில்லியன் ரிங்கிட்டாகவும் உயர்ந்துள்ளதாகவும், அந்த வருவாய் மீண்டும் குடியிருப்புகளின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கே பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
தனியார் கூட்டு மேலாண்மை அமைப்புகள் நிர்வகிக்கும் பொதுமக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் மாநில அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்த டத்தோ ஜஃப்னி ஷூகோர், இதற்காக 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். அதன் மூலம் ஜோகூர் பாரு, இஸ்கண்டார் புத்ரி, பாசிர் கூடாங் மற்றும் கூலாய் ஆகிய உள்ளாட்சி மன்றப் பகுதிகளில் உள்ள 76 அடுக்குமாடி குடியிருப்புகள், 236 கட்டடத் தொகுதிகள் மற்றும் 11,649 வீட்டு அலகுகளில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாநிலத்தில் இன்னும் தீர்வு காணப்பட வேண்டிய சில பிரச்சினைகள் இருப்பதை மாநில அரசு மறுப்பதில்லை என்றும், இருப்பினும் அவற்றை கட்டம் கட்டமாகச் சரிசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால், மக்கள் குடியிருப்புகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என்று டத்தோ ஜஃப்னி ஷூகோர் வலியுறுத்தினார்.
The post RM172 மில்லியன் ஒதுக்கீட்டில் வீடுகள் மேம்பாடு: பிரதமர் கருத்துக்கு ஜோகூர் அரசு பதில்! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

