Last Updated:
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
சீனாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பசிபிக் பெருங்கடலில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சீனா நேற்று வெற்றிகரமாக சோதித்தது. இந்த ஏவுகணை எந்த ஒரு இலக்கையும் குறி வைத்து சோதிக்கப்படவில்லை என்றும் இது வழக்கமான சோதனையே என்றும் சீன ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், இதுபோன்ற சோதனைகளை நடத்துவது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
சீனாவின் அணு ஆயுத சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட், அணு ஆயுதப் பரவலைத் தடுக்க அமெரிக்கா கடுமையாக உழைத்து வரும் வேளையில், சீனா அதற்கு நேர்மாறாகச் செயல்படுவதாக சாடியுள்ளார். மேலும், அணு ஆயுதக் கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தையில் சீனா பங்கேற்க வேண்டும் என்றும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அளித்த வாக்குறுதிகளுக்கு இணங்க, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை குறித்து முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும் டாமி பிகாட் வலியுறுத்தியுள்ளார்.
Jul 07, 2026 12:44 PM IST

