இந்தியாவின் UPPER MIDDLE CLASS மாநிலம் தமிழ்நாடு.. உலக வங்கி அறிக்கையால் வெளிவந்த சுவாரஸ்ய தகவல்..!!
இந்தியாவில் பொருளாதாரம், தனிநபர் வருமானம், உற்பத்தி, சேவை, தொழில் துறை என அனைத்திலுமே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. தற்போது இந்தியாவின் அப்பர் மிடில் கிளாஸ் மாநிலம் என்ற பெருமையும் தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது.
உலக வங்கி சமீபத்தில் எந்தெந்த நாடுகள் அப்பர் மிடில் கிளாஸாக உயர்ந்திருக்கின்றன என்ற புள்ளி விவரங்களை வெளியிட்டது. இதன் அடிப்படையில் கணக்கீடு செய்து பார்த்தால் இந்தியாவிலேயே 5 மாநிலங்கள் தான் அப்பர் மிடில் இன்கம் அதாவது உயர்-நடுத்தர வருமானம் கொண்ட மாநிலங்களாக இருக்கின்றன. அதில் தமிழ்நாடும் இடம்பிடித்துள்ளது.

உலக வங்கி ஒவ்வொரு ஆண்டும் நாடுகளின் தனி நபர் வருமானத்தை வைத்து அவற்றை லோவர் இன்கம் கிளாஸ் (lower income class) , மிடில் இன்கம் கிளாஸ் (middle income class), அப்பர் மிடில் இன்கம் கிளாஸ் (upper middle income class) என வகைப்படுத்துகிறது. இதில் upper middle income கொண்ட நாடுகளின் வரிசையில் சேர, அந்த நாட்டின் ஒரு தனிநபர் வருமானம் குறைந்தபட்சம் 4,636 டாலர் என்ற அளவை தாண்ட வேண்டும். இந்த அளவுகோலை இந்தியாவின் 5 மாநிலங்கள் தற்போது எட்டியுள்ளன.
இந்தியாவின் தலைநகரான டெல்லி தொடங்கி தென்னிந்தியாவின் கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்களும் தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் அப்பர் மிடில் கிளாஸ் மாநிலங்களாக உள்ளன. இந்த மாநிலங்களின் தனிநபர் வருமானம்:
1. டெல்லி – $6,217
2. கர்நாடகா – $5,579
3. தெலங்கானா – $5,407
4. தமிழ்நாடு – $5,329
5. குஜராத் – $4,734

இந்த 5 மாநிலங்களும் உலக வங்கியின் குறிப்பிட்ட தனிநபர் வருமானத்தை தாண்டி உலகளாவிய அளவில் பல நாடுகளுக்கு நிகரான பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் 5,329 டாலர் ( சுமார் 5 லட்சம் ரூபாய்) என்ற தனி நபர் வருமானம், பொருளாதார ரீதியாக தமிழ்நாடு வலுவான நிலையில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
இந்த பட்டியலில் மகாராஷ்டிரா , ஹரியானா மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் இந்த இலக்கை எட்டுவதற்கு மிக அருகில் வந்துவிட்டன. உதாரணமாக, மகாராஷ்டிரா அப்பர் மிடில் கிளாஸ் நிலையை தொட வெறும் 8 டாலர் மட்டுமே தேவைப்படுகிறது.
இந்தியாவில் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக தொடர்ந்து நீடிக்கிறது தமிழ்நாடு. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தொழில்நுட்பம், உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறைகளில் தமிழ்நாடு பெற்றுள்ள வளர்ச்சி, மாநிலத்தின் தனிநபர் வருமானத்தை உயர்த்தி இந்த பெருமையை தேடி வந்துள்ளது.
இந்திய பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக ‘கீழ்-நடுத்தர வருமானம்’ (Lower-Middle Income) என்ற பிரிவில் இருந்தாலும், மாநில அளவில் தமிழகம் போன்ற மாநிலங்கள் ‘மேல்-நடுத்தர வருமானம்’ கொண்ட நாடுகளின் தரத்திற்கு முன்னேறியிருப்பது, மாநிலத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியின் வெற்றியை காட்டுகிறது.
1990களில் இந்தியாவின் எந்த ஒரு மாநிலமும் இப்படி ஒரு நாட்டுக்கு நிகரான தனிநபர் வருமானத்தை எட்டவில்லை. ஆனால் இப்போது அது சாத்தியமாகியுள்ளது. கர்நாடகா, தெலங்கானா மாநிலங்கள் இந்தோனேஷியா, வியட்நாம் நாடுகளை விட அதிக தனிநபர் வருமானம் கொண்ட மாநிலங்களாக உள்ளன.

