Last Updated:
பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி, தற்கொலைக்கும் முயன்றுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 40 வயதான கிரிக்கெட் பயிற்சியாளர் மனு (Manu M) என்பவர், தன்னிடம் கிரிக்கெட் பயில வந்த 12 முதல் 16 வயதுக்குட்பட்ட மைனர் சிறுமிகளைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து அச்சுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளில், நான்கு வழக்குகளின் விசாரணை முடிவடைந்து, திருவனந்தபுரம் விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஞ்சு மீரா பிர்லா அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளார். இந்த நான்கு வழக்குகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 127 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் மற்றும் 2,23,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்தத் தண்டனைக் காலங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரும் என்பதால், அவர் ஒட்டுமொத்தமாக 42 முதல் 47 ஆண்டுகள் வரை உண்மையான சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், உடற்தகுதிப் பயிற்சி என்ற போர்வையில் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் குளியலறை போன்ற இடங்களுக்குச் சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக மனு மீது புகார்கள் எழுந்தன. மேலும், சிறுமிகளின் ஆபாசப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, அதை வெளியில் கூறினால் அவர்களின் கிரிக்கெட் எதிர்காலத்தை பாழாக்கிவிடுவேன் என அவர் மிரட்டியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகி, தற்கொலைக்கும் முயன்றுள்ளார். பின்னர் 2024 ஆம் ஆண்டில், பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி கிரிக்கெட் போட்டிக்காகத் திருவனந்தபுரம் வந்தபோது, இந்த பயிற்சியாளரைக் கண்டு பயந்து அலறியுள்ளார். அதன் பின்னரே இந்த கொடூர சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தன. அந்தச் சிறுமியின் தைரியத்தைப் பார்த்து, பாதிக்கப்பட்ட மற்ற சிறுமிகளும் புகார் அளிக்க முன்வந்தனர்.
இந்த நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட்ட மனுவுக்கு 127 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.


