இந்திய மசாலா பிராண்டான MDH நிறுவனத்தின் தொலைகாட்சி விளம்பரத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்கமாட்டீர்கள். ஆனால் சமீபத்தில் MDH பொருட்கள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மசாலா பொருட்களில் எதிலின் ஆக்ஸைடு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் எதற்கும் ஆதாரம் இல்லையென்றும் இந்தப் பிரச்சனை தொடர்பாக ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் அதிகாரிகளிடமிருந்து இந்திய மசாலா வாரியத்திற்கோ அல்லது FSSAI அமைப்பிற்கோ எந்தவிதமான தகவல்களோ அல்லது பரிசோதனை அறிக்கைகளோ எதுவும் வரவில்லை என MDH தரப்பு கூறுகிறது. இவ்வுளவு பிரச்சனைகளுக்கு நடுவில் புகழ்பெற்ற MDH பிராண்டிற்கு பின்னால் உள்ள நபரை பற்றி தெரிந்துகொள்வோமா?
மசாலா கிங் என அன்போடு அழைக்கப்படும் மஹாசாய் தரம்பால் குலாட்டி, 1913-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி சியால்கோட் (தற்போது பாகிஸ்தானில் இருக்கிறது) என்ற ஊரில் பிறந்தார். மஹாசியான் டி ஹட்டி (Mahashian Di Hatti) என்ற பெயரில் இவருடைய தந்தை மசாலா கடையை நடத்தி வந்தார். பத்து வயதாக இருக்கும் போது பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய குலாட்டி, குடும்பத்திற்கு உதவியாக ஹார்டுவேர் விற்பனை, அரிசி வியாபாரம், தச்சு வேலை போன்ற சின்ன சின்ன வேலைகளை செய்து வந்தார். அதன்பிறகு தனது தந்தையின் மசாலா கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போதே இதன் தினசரி வருமானம் ரூ.500 முதல் ரூ.800 வரை இருந்தது.
1947ம் ஆண்டு நிகழ்ந்த பிரிவினை கலவரத்தில் இவர்களுடைய புகழ்பெற்ற மசாலா கடை அடித்து நொறுக்கப்பட்டது. இதனால் வேறு வழியின்றி பிழைப்பிற்காக தங்கள் வீடு, வாழ்வாதாரம், பெருமை எல்லாவற்றையும் கைவிட்டனர். இந்த சமயத்தில் கடுமையான கஷ்டங்களை சந்தித்த குலாட்டி பல வேலைகளை செய்தார்.
ஆனால் இவர் மனதிற்குள் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்நிலையில் ரூ.650 செலவு செய்து சொந்தமாக குதிரை வண்டி ஒன்றை வாங்கி, டெல்லி ரயில் நிலையத்திலிருந்து பல பகுதிகளுக்கும் சவாரி செய்தார். இதில் கிடைத்த பணத்தை சேர்த்து டெல்லி கரோல் பாகில் உள்ள அஜ்மல் கான் சாலையில் ஒரு சிறிய கடையை வாங்கினார். MDH நிறுவனத்தின் அடித்தளம் இங்குதான் ஆரம்பமானது. இன்று 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 60 பொருட்களுக்கும் மேல் ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
வியாபாரத்தை தவிர்த்து குலாட்டின் தாராள குணமும் வள்ளல்தன்மையும் அனைவரும் அறிந்ததே. மகாசாய் தரம்பால் வித்யா மந்திர் மற்றும் MDH இண்டர்நேஷனல் பள்ளி என்ற கல்வி நிறூவனங்களை நடத்தி வரும் குலாட்டி, குடிசை பகுதியில் வசிக்கும் மக்களுக்காக 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையும் நடமாடும் மருத்துவ வசதியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
Also read |
அன்று ரூ.20 ஆயிரம் முதலீடு… இன்று ரூ.200 கோடி மதிப்பு நிறுவனம்… ஐடி ஊழியரின் சாதனை கதை!
94 வயதிலும் FMCG துறையில் அதிகம் சம்பளம் பெறும் சிஇஓ-வாக இருந்த பெருமை தரம்பால் குலாட்டியை மட்டுமே சேரும். உலகம் முழுவதும் இந்திய மசாலாக்களின் சுவையை பிரபலபடுத்தி, கஷ்டப்படுகிறவர்களுக்கு நன்கொடை மூலம் உதவி செய்து பெருமைமிகு நிறுவனத்தை உருவாக்கிய குலாட்டி 2020-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி இறந்தார். அவருக்கு வயது 97. MDH நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.10,000 கோடியிலிருந்து ரூ.15,000 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
