சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறையைச் சமாளிக்க வெளிநாட்டு செவிலியர்களை வரவழைக்கும் திட்டத்தில் சிக்கலான செயல்முறைகள் உள்ளன என்றும், அது அதிக செலவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் சுகாதார அமைச்சகம் கூறுகிறது. வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்தும் முதலாளிகள் சந்திக்கும் செலவுகளைப் போலவே, முகவர் கட்டணங்கள் உட்பட பல்வேறு செலவுகளை அரசாங்கம் ஏற்க வேண்டியிருக்கும் என்று சுகாதார அமைச்சகத்தின் பொதுச்செயலாளர் ஹஸ்னோல் ஸம் ஸம் அஹ்மத் கூறினார். அரசாங்கங்களுக்கு இடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டும். ஆனால் அது இன்னும் இல்லை.
மேலும், தகுதிகளை அங்கீகரிப்பது போன்ற சிக்கல்களும் உள்ளன. ஆகவே, செய்ய வேண்டியவை நிறைய உள்ளன என்று கூறிய அவர், இந்த அணுகுமுறை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படாது என்றும் வலியுறுத்தினார். நாட்டின் சுகாதார அமைப்பின் திசை குறித்து விவாதித்த, சமீபத்திய ‘Bicara Sihat Edisi Khas’ பாட்காஸ்டில் ஹஸ்னோல் இவ்வாறு கூறினார்.
வெளிநாட்டு செவிலியர்களை அரசுக்கு அழைத்து வருவதற்கான பரிந்துரைகளை அமைச்சகம் பரிசீலிக்குமா என்பது குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.மேலும் விவரித்த ஹஸ்னோல், அரசு சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர் பற்றாக்குறையைச் சமாளிக்க, உள்ளூர் சுகாதாரப் பணியாளர்களை வலுப்படுத்துவதில் அமைச்சகம் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.அதிக பயிற்சி பெற்ற செவிலியர் பணியாளர்களை உருவாக்குவதற்காக, அமைச்சகம் தனது பயிற்சி நிறுவனங்களின் திறனை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.பயிற்சி நிறுவனங்களின் விரிவாக்கத்தின் நோக்கம், ஒவ்வொரு குழுவிலும் செவிலியர் சேர்க்கையை சுமார் 3,000-லிருந்து 5,000 என்ற இலக்கிற்கு உயர்த்துவதாகும் என்று ஹஸ்னோல் கூறினார்.
அடுத்த ஆண்டு தனியார் செவிலியர் கல்லூரிகளுடன் அமைச்சகம் ஒத்துழைப்பைத் தொடங்கும் என்றும், ஓய்வு பெற்ற அல்லது முன்னாள் செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது தேவைக்கேற்பவோ மீண்டும் பணிக்குத் திரும்ப ஊக்குவிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.சில செவிலியர்கள் பல்வேறு காரணங்களுக்காக முன்கூட்டியே ஓய்வு பெறத் தேர்வு செய்கிறார்கள், பின்னர் அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப விரும்பலாம் என்று அவர் கூறினார். கூறினார். எனவே, அவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை நாம் பரிசீலிக்கலாம். இவை கிடைக்கக்கூடிய விருப்பங்களில் அடங்கும்.



