Last Updated:
கர்நாடகாவில் மனைவி குண்டாக இருந்ததை கிண்டல் செய்து, கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன், அவரை கழுத்தை நெரித்து கொலையும் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம், தார்வாட் மாவட்டம், நவல்குந்த் தாலுகாவில் உள்ள ஹனாசி கிராமத்த்தைச் சேந்தவர் 29 வயதான பிரியங்கா . கல்புர்கி மாவட்டம் சிஞ்சோலியில் செவிலியராக பணியாற்றி வந்த பிரியங்காவுக்கு கடந்த 2024ம் ஆண்டு பசவராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. குஸ்தி பயில்வானான பசவராஜ் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், இயல்பாகவே சற்று உடல் எடை அதிகரித்து காணப்பட்ட பிரியங்காவுக்கு கணவன் வீட்டுக்கு சென்றது முதலே சோதனை காலம் ஆரம்பித்து விட்டது. மனைவியின் உடல் எடையை சுட்டிக் காட்டி அவ்வப்போது திட்டி வந்த கணவர் பசவராஜ் சில மாதங்களுக்கு பிறகு அவரது நடத்தை மீதும் சந்தேகப்பட ஆரம்பித்திருக்கிறார். கணவர் மட்டுமின்றி அவரது குடும்பத்தினரும் பிரியங்காவை தொடர்ந்து உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்த ஆரம்பித்தனர்.
அதோடு விடாத அவர்கள், பெற்றோர் வீட்டிலிருந்து கூடுதல் நகைகளை வாங்கி வருமாறு தொல்லை கொடுத்துள்ளனர். கணவன் பசவராஜ் மனைவியின் உடல் எடை குறித்து தொடர்ந்து அவமானப்படுத்தி வந்த அதேநேரம். , அவரால் கருத்தரிக்கவோ, அல்லது குழந்தை பெற்றெடுக்கவோ இயலாது என்றும் கூறி பெரும் மனஉளைச்சலை கொடுத்திருக்கின்றனர் பசவராஜ் குடுமபத்தினர்.
இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த திங்கள் கிழமை இரவு மீண்டும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரம் தலைக்கேறிய பசவராஜ் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.
அதன்பின் அந்த கொலையை மறைக்க பசவராஜூம் அவரது குடுமபத்தினரும் முயன்றிருக்கின்றனர். இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் இந்த கொலை சம்பவமே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உயிரிழந்த பிரியங்காவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், நவல்குண்ட் காவல்துறையினர் கொலை மற்றும் வரதட்சணைக் கொடுமை தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக கணவர் பசவராஜ் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ரேனவ்வா, சுபாஷ் சித்தராமேஷ் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Jul 03, 2026 11:45 AM IST


