50 நாளில் ரூ.11,526 கோடி.. தமிழ்நாடு கஜானாவுக்கு சத்தமில்லாமல் வந்த பணம்!
தமிழக அரசின் பல்வேறு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த ரூ.11,526 கோடி அரசின் கருவூலத்துக்கு மீண்டும் திருப்பிச் செலுத்தப்பட்டு உள்ளது.
மரியே வில்சன் தலைமையிலான நிதி அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்புப் குழு மேற்கொண்ட விரிவான ஆய்வின் மூலம் இந்த நிதி கண்டறியப்பட்டு, முழுமையாக அரசின் கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முந்தைய ஆட்சியிலேயே எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அரசுத் திட்டங்களை செயல்படுத்த ஆண்டுதோறும் பல்வேறு துறைகளுக்கு தமிழ்நாடு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், சில திட்டங்கள் தாமதமாக செயல்படுவது, ஒதுக்கப்பட்ட தொகை முழுமையாக பயன்படுத்தப்படாதது அல்லது நிர்வாக காரணங்களால் வங்கிக் கணக்குகளில் நிதி நீண்டகாலமாக இருப்பில் இருப்பது போன்ற சூழல்கள் ஏற்படுகின்றன.
இத்தகைய பயன்படுத்தப்படாத தொகைகளை ஒருங்கிணைக்க ஆய்வு செய்யும் நோக்கில் நிதித்துறையின் கீழ் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில், 2021 நவம்பர் 1 முதல் 2025 ஜூன் 24 வரையிலான காலகட்டத்தில் சுமார் ரூ.11,526 கோடி பயன்படுத்தப்படாமல் இருந்தது தெரியவந்தது.
எந்த துறைகளில் அதிக நிதி முடங்கியிருந்தது?
ஆய்வில், உள்ளாட்சித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், பொதுப்பணித் துறை, கல்வித் துறை மற்றும் சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வங்கிக் கணக்குகளில் குறிப்பிடத்தக்க அளவில் பயன்படுத்தப்படாத நிதி இருந்தது கண்டறியப்பட்டது.
இந்தத் தொகைகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, அரசின் கருவூலத்துக்கு திருப்பி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
RTI மூலம் வெளியான தகவல்
இந்த விவரங்கள், தேனியைச் சேர்ந்த ராம்கி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிய தகவலுக்கு அளிக்கப்பட்ட பதிலின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பயன்படுத்தப்படாமல் இருந்த ஒவ்வொரு ரூபாயையும் அடையாளம் கண்டு மீட்டெடுக்கும் பணியில் சிறப்புப் பணிக்குழு செயல்பட்டதாகவும், கண்டறியப்பட்ட மொத்த தொகையும் அரசின் கருவூலத்தில் சேர்க்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

