Last Updated:
இருதரப்புப் பேச்சுவார்த்தையின் முக்கியப் பகுதியாக, ’16-வது இந்தியா – ஜப்பான் வருடாந்திர கூட்டு மாநாடு’ நடைபெற உள்ளது
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பானின் புதிய பிரதமர் சனாயே டகாய்ச்சிக்கு (Sanae Takaichi), டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் இன்று சிறப்பான இராணுவ மரியாதை வழங்கப்பட்டது. ஜப்பான் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் கலந்துகொண்டு ஜப்பான் பிரதமரை வரவேற்றார்.
முன்னதாக, புதன்கிழமை இரவு புதுடெல்லி பாலத்தின் தொழில்நுட்ப விமான நிலையத்திற்கு வந்தடைந்த ஜப்பான் பிரதமரை, மத்திய அரசின் சார்பில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேரில் சென்று மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்தியாவிற்கு வந்துள்ளதில் தாங்கள் பெருமகிழ்ச்சி அடைவதாக ஜப்பான் அமைச்சரவையின் பொதுத்தொடர்பு அதிகாரி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பிரதமர் சனாயே டகாய்ச்சி இந்தியாவில் மூன்று நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தையின் முக்கியப் பகுதியாக, ’16-வது இந்தியா – ஜப்பான் வருடாந்திர கூட்டு மாநாடு’ (16th Japan-India Annual Summit) நடைபெற உள்ளது.
இம்மாநாட்டின் வாயிலாக இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய விவகாரங்கள், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கூட்டுறவு குறித்து இருநாட்டுப் பிரதமர்களும் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர். ஜப்பானிய ஊடகங்களின்படி, இந்த மாநாட்டின் போது பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 120 ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இந்தியா மற்றும் ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஜப்பானைச் சேர்ந்த முன்னணி தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் 12.5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 1.04 லட்சம் கோடி) முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன. இதற்காக நடைபெற உள்ள ‘இந்தியா – ஜப்பான் பொருளாதார மன்ற’ கூட்டத்தில் ஜப்பானில் இருந்து 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
ஜப்பான் பிரதமருடன் வந்துள்ள அந்நாட்டின் துணை தலைமை அமைச்சரவைச் செயலாளர் மசானோ ஒசாகி இதுகுறித்து கூறுகையில், இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் இரு நாட்டு அரசுகளுக்கு இடையிலான தேசியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளின் வியூகம் சார்ந்த நட்புறவை மேலும் பலப்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3 நாள் பயணமாக இந்தியா வந்தார் ஜப்பான் பிரதமர்! குடியரசு தலைவர் மாளிகையில் நேரில் வரவேற்ற பிரதமர் மோடி!


