India
oi-Nantha Kumar R
கவுஹாத்தி: அசாமில் வசித்து வரும் தினக்கூலி தொழிலாளி ஒருவர் தான் ஒரு இந்தியர் என்பதை நிரூபிக்க 1951ம் ஆண்டு நடந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டு விவரம், வாக்காளர் அடையாள அட்டை உள்பட 15 வகையான ஆவணங்களை சமர்ப்பித்தும் இந்தியர் என்பதை நிரூபிக்க தவறிவிட்டார். அவர் வெளிநாட்டவர் என்று வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில் கவுஹாத்தி உயர்நீதிமன்றமும் அதனை உறுதி செய்துள்ளது.
அசாமில் பாஜகவின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஹிமாந்த விஸ்வா சர்மா உள்ளார். அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினரை கண்டுபிடித்து வெளியேற்றும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens or NRC) அமலில் உள்ளது.

கடந்த 1951ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதன்பிறகு தேசிய குடிமக்கள் பதிவேட்டை அசாம் உருவாக்கியது. 2019ல் திருத்தங்களுடன் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து அசாமில் வசிப்போர் தங்களின் இந்திய குடியுரிமையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி கடந்த 1951ம் ஆண்டு நடந்த தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் தங்களின் தந்தை அல்லது தாத்தா – பாட்டியுடனான தொடர்பை நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் 1971ம் ஆண்டுக்கு முன்பு மூதாதையர்களின் லெகஸி டேட்டா (Legacy Data) ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது அசாமில் வசிக்கும் கூலி தொழிலாளி ஒருவர் வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். 15 வகையானஆவணங்களை அவர் சமர்ப்பித்தும் இந்திய குடியுரிமை கொண்டவர் என்பது நிரூபிக்க முடியவில்லை. இதனை வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயம் மற்றும் அசாம் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
கடந்த 1988ம் ஆண்டில் பிறந்தவர் அசாமில் வசித்து வருகிறார். இவருக்கு வயது 38. இவர் அசாம் தலைநகர் கவுஹாத்தி அருகே போர்போரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து தினக்கூலியாக பணியாற்றி வருகிறார். முதலில் சாராய் கசாரா பகுதியில் வசித்து வந்த இவர் அதன்பிறகு பிற இடங்களுக்கு குடிபெயர்ந்தார்.
அதன்படி டோபகுரா, குகுடேபா மற்றும் ஹஷ்டோபா உள்ளிட்ட இடங்களில் வசித்து வந்தார். ஹஷ்டோபா பகுதியில் 1999ம் ஆண்டில் 5ம் வகுப்பு படித்தார். அதன்பிறகு படிப்பை பாதியில் கைவிட்டு கூலி வேலைக்கு சென்றார். இவர் தனது குடியுரிமையை நிரூபிக்க 15 வகையான ஆவணங்களை வழங்கினார். அதன்படி 1951ல் அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற்றிருந்த தனது தந்தை, தாத்தா பாட்டியின் பெயர் ஆவணத்தின் கம்யூட்டர் நகல், 1966 முதல் 2017 வரை குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வாக்காளர் பட்டியல், 1973ல் அவரது தாத்தாவால் வாங்கப்பட்ட நிலம் ஒன்றில் பத்திரம், பள்ளி படிப்பு சான்று, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்பட 15 ஆவணங்களை வழங்கினார். இதுதவிர வாய்மொழி சாட்சியங்களாக பல விவரங்களை எடுத்து கூறினார்.
ஆனால் இவை அனைத்தும் ஏற்கப்படவில்லை. இதனால் வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்டார். வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயம் (Froreigners Tribunal) இந்த தீர்ப்பை வழங்கியது. அப்போது தீர்ப்பாயம் சார்பில் ”மனுதாரர் சமர்ப்பித்த 1951 தேசிய குடிமக்கள் பதவேட்டு ஆவணங்கள் Computer Generated Statement ஆக உள்ளது. இதனால் கூடுதல் ஆவணங்கள் இணைக்க வேண்டும். இந்திய சாட்சிய சட்டம் 1872ன் பிரிவு 62பி ன்படி தேவையான கூடுதல் ஆவணங்கள் இணைக்கப்படவில்லை” என்று கூறி அவர் இந்தியர் என்பதை ஏற்க மறுத்தது.
இதனை எதிர்த்து அந்த தொழிலாளி கவுஹாத்தியில் உள்ள அசாம் உயர்நீதிமன்றத்தை நாடினார். அப்போது வெளிநாட்டவருக்கான தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. கூலி தொழிலாளி வழங்கிய ஆவணங்கள் சட்டப்பூர்வமாக ஏற்க முடியாதவை. குடியுரிமையை நிரூபிக்க போதுமானதாக இல்லை என கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனால் பிறந்தது முதல் அந்த தொழிலாளி அசாமில் இருந்தாலும் கூட தற்போது அவர் வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் இந்த விவகாரத்ததில் இன்னும் சில வாய்ப்புகள் அவருக்கு உள்ளன. அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி அவர் தனது குடியுரிமையை கூட நிரூபிக்கலாம். அதற்கு நாம் இன்னும் சில காலம் பொறுத்திருக்க வேண்டும். இதனால் இந்த செய்தியில் அவரது பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது.

