இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்துவரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் எதிர்வரும் 2024 டி20 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளாராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட்டின் கீழ், இந்தியா நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் 2022 டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிப்போட்டிவரையிலும், 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிவரை வரையிலும் முன்னேறிய இந்திய அணி கோப்பை வெல்லாமல் வெறுங்கையோடு திரும்பியது.
இந்நிலையில், ராகுல் டிராவிட்டுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பாக 2024 டி20 உலகக்கோப்பை தொடர் பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த கோப்பையை இந்திய அணி வென்றுவிட்டாலும், ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக நீடிக்கப்போவதில்லை. அதனால் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடுதலை பிசிசிஐ தொடங்கியுள்ளது.
முதலில் ரிக்கி பாண்டிங், ஸ்டீபன் ஃபிளெமிங், ஜஸ்டின் லாங்கர், விவிஎஸ் லக்சுமன் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா முதலிய முன்னாள் ஜாம்பவான்களின் பெயர் தலைமை பயிற்சியாளருக்கான போட்டியில் இருந்ததாகவும், பின்னர் அனைத்து வீரர்களும் விருப்பம் தெரிவிக்காததால் இறுதியில் கவுதம் கம்பீரை நோக்கி தலைமை பயிற்சியாளர் பதவி நகர்ந்துள்ளது.


