International
oi-Vigneshkumar
பெய்ஜிங்: இந்தியா உடனான நல்லுறவைப் பேண மறுக்கும் வங்கதேசம், தொடர்ந்து சீனா பக்கம் நகர்ந்து வருகிறது. இதற்கிடையே இந்திய எல்லைக்கு மிக அருகே பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனாவின் உதவியை நாடியிருக்கிறது வங்கதேசம். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், சீனா அந்த திட்டத்தை விடுவதாக இல்லை. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தீஸ்தா நதி இந்தியாவின் சிக்கிம் மற்றும் மேற்கு வங்கம் வழியாக வங்கதேசத்திற்குள் நுழைகிறது. பல ஆண்டுகளாக, இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே இந்த நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் உள்ளது. இதனால் கோடையில் தண்ணீர் இல்லாமல் வங்கதேசம் பாதிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

சீனாவின் உதவியை நாடிய வங்கதேசம்
இந்த பிரச்சனைக்கு இந்தியா உடனான பேச்சுவார்த்தையில் மும்முரம் காட்டுவதற்குப் பதிலாகச் சீனாவை நாடியுள்ளது வங்கதேசம்! தீஸ்தா நதியை ஆழப்படுத்தி, அதில் நீர்த்தேக்கங்கள் மற்றும் கரைகளை வலுப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு இந்தியா கவலை தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பாகச் சீனா சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறது.
இந்தத் திட்டத்தில் வங்கதேசத்துடன் இணைந்து செயல்படப் போவதாகவும் இதில் எந்தவொரு மூன்றாவது நாடும் தலையிடக்கூடாது என்றும் சீனா கூறியுள்ளது.. இது குறித்து பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன், “சீனா மற்றும் வங்கதேசம் இடையிலான ஒத்துழைப்பு என்பது எந்த ஒரு மூன்றாவது நாட்டையும் குறிவைக்கவில்லை. பிற நாடுகள் இதில் தலையிடக்கூடாது.
தீஸ்தா நதி
தீஸ்தா நதி மேலாண்மைப் பணியை வங்கதேச மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய திட்டமாகச் சீனா கருதுகிறது. தீஸ்தா நதியின் விரிவான சீரமைப்பு மற்றும் மேலாண்மை என்பது வங்கதேச அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஒரு வாழ்வாதார திட்டமாகும். அதற்கு எங்களால் முடிந்த அனைத்து ஆதரவையும் வழங்க சீனா தயாராக இருக்கிறது. வங்கதேசத்துடன் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி, பொருளாதாரம், வர்த்தகம், நீர் மேலாண்மை மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த திட்டம் குறித்துக் கவலைப்பட இந்தியாவுக்குக் காரணம் இல்லாமல் இல்லை. வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கும் சிலிகுரி காரிடாருக்கு அருகே அமைந்துள்ளது. இது மிகக் குறுகலான பகுதி என்பதால் இதை ‘சிக்கன்ஸ் நெக்’ என்று அழைப்பார்கள். இந்த எல்லைப் பகுதிக்கு மிக அருகில் (சுமார் 100 கி.மீ தூரத்திற்குள்) சீன அரசு நிறுவனங்கள் மற்றும் பொறியாளர்கள் முகாம் அமைத்து வேலை செய்வதை இந்திய ராணுவம் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக பார்க்கிறது.
கண்காணிக்கும் இந்தியா
இதன் காரணமாகவே இந்த திட்டத்தை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய இப்பகுதியில், சீனாவின் இருப்பு அதிகரிப்பது நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது. சீனாவின் இந்த செயல் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உருவாக்கலாம் என்று இந்தியாவின் பாதுகாப்பு வட்டாரங்கள் கருதுகின்றன.
சீனா வங்கதேசம்
இதற்கிடையில் இந்தத் திட்டம் தொடர்பாக வங்கதேசம் மற்றும் சீனாவின் நிபுணர்கள் இணைந்து ஒரு விரிவான தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள உள்ளதாக வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதற்கு முன் இல்லாத வகையில் தற்போது இரு நாடுகளும் இணைந்து இந்த ஆய்வை மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன. இந்த திட்டத்திற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க தயாராக இருப்பதாகச் சீனா தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீஸ்தா நதி உட்பட வங்கதேசத்தின் பல்வேறு நதிகளை நிர்வகிப்பதில் ஒத்துழைப்பை அதிகரிக்க வங்கதேசமும் சீனாவும் முடிவு செய்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதாவது ஜனவரி மாதத்தில், வங்கதேச குடிநீர் மேம்பாட்டு வாரியமும் சீனாவின் அரசுக்குச் சொந்தமான பவர்சீனா நிறுவனமும் தங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேலும் ஒரு காலத்திற்கு நீட்டித்து குறிப்பிடத்தக்கது.



