Last Updated:
ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர், கடைசி பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு 25 பந்துகளில் அரை சதம் விளாசினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியதை அடுத்து, மகளிர் டி20 உலகக்கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறியது.
மகளிருக்கான 10ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 1 பிரிவில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்ததை அடுத்து, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்தது.
ஸ்மிரிதி மந்தனா, ஷபாலி வர்மா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்த நிலையில், அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஜெமிமாவும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய ஹர்மன்ப்ரீத் கவுர், கடைசி பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு 25 பந்துகளில் அரை சதம் விளாசினார். 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியில் ஜார்ஜியா வோல் முதல் ஓவரிலேயே விக்கெட்டை பறிகொடுத்தார்.
லிட்சிபீல்ட், மூனி ஆகியோர் ஓரளவுக்கு ரன் குவித்த நிலையில், அதன் பிறகு ஜோடி சேர்ந்த பெரி, கார்டனர் இருவரும் அதிரடி காட்டியதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு சரிந்தது. இறுதியில் 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்ரேலிய அணி 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை பறிகொடுத்து, உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
Chennai,Tamil Nadu
Jun 29, 2026 11:13 AM IST


