கோலாலம்பூர்:
புதிதாக தொடங்கப்பட்ட LRT3 ஷா ஆலாம் ரயில் வழித்தடத்தின் முதல் நாள் இயக்கம் இன்று எவ்வித பெரிய தடங்கல்களுமின்றி சுமுகமாகத் தொடங்கியது. ஆரம்பக் கட்டத்தில் சில சிறிய தொழில்நுட்பச் சிக்கல்கள் மட்டுமே எழுந்ததாக அதனை இயக்கும் ‘பிரசாரானா’ (Prasarana Malaysia Bhd) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று காலை இந்த புதிய ரயில் சேவையின் முதல் நாள் இயக்கத்தையும், பயணிகளின் வருகையையும் நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாரானாவின் முன்னாள் தலைவரும் குழும தலைமை நிர்வாக அதிகாரியுமான அமீர் ஹம்தான் கூறியதாவது: “ரயில்களின் இயக்கம், நிலைய வசதிகள் மற்றும் பயணிகளின் நடமாட்டம் ஆகியவை இன்று காலை முழுவதும் சீராகக் கட்டுக்குள் இருந்தன. கூட்ட நெரிசல் மிகுந்த காலை வேளைகளில் (Peak Hours) ஒவ்வொரு 8 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற இடைவெளியில் சேவைகள் தடையின்றி வழங்கப்பட்டன” என்றார் .
“இணைப்புப் பேருந்து சேவைகளில் (Feeder Bus) சில சிறிய சிக்கல்கள் இருந்தன, ஆனால் அவை பெரியவை அல்ல. ஒரு புதிய ரயில் வழித்தடம் திறக்கப்படும்போது இத்தகைய ஆரம்பக் கட்டச் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பானதே. அதிகமான மக்கள் டிக்கெட் இயந்திரங்களையும், தானியங்கி நுழைவு வாயில்களையும் பயன்படுத்தத் தொடங்கும்போது, எங்கு மேம்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதை எங்களால் துல்லியமாகக் கண்டறிய முடியும்” என்று அவர் கூறினார்.
கிள்ளான் பள்ளத்தாக்கின் முக்கிய வழித்தடங்களான கெலானா ஜெயா (LRT) மற்றும் காஜாங் (MRT) ஆகியவற்றுடன் இணையும் கிளன்மேரி 2 (Glenmarie 2) மற்றும் பண்டார் உத்தாமா (Bandar Utama) ஆகிய நிலையங்களில் இன்று பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. புதிய ரயிலில் பயணிக்கும் அனுபவத்தைப் பெறக் குடும்பங்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் பயணித்தனர்.
இன்று முதல் நாள் காலை வேளையில் மட்டும் சுமார் 5,000 முதல் 10,000 பயணிகள் இந்த புதிய ரயில் சேவையைப் பயன்படுத்தியிருக்கலாம் என பிரசாரானா மதிப்பிட்டுள்ளது. இந்த புதிய வழித்தடத்தின் மூலம் முதலாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 67,000 பயணிகள் பயணிப்பார்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எதிர்கால மேம்பாடுகள் குறித்துப் பேசிய அமீர் ஹம்தான், எல்.ஆர்.டி 3 வழித்தடத்தில் பெண்களுக்கான பிரத்யேகப் பெட்டிகளை (Women-only Coach) அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போது பரிசீலனையில் இல்லை என்றும், பயணிகளின் தேவை மற்றும் கருத்துக்கணிப்புகளின் அடிப்படையிலேயே அது குறித்துப் பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கெலானா ஜெயா மற்றும் அம்பாங் வழித்தடங்களைப் போல, இந்த புதிய ஷா ஆலாம் வழித்தடத்தின் ரயில் நிலைய மேடைகளிலும் பாதுகாப்புத் தடுப்புச் சுவர்கள் (Platform Safety Barriers) படிப்படியாக நிறுவப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மொத்தம் 20 நிலையங்களைக் கொண்ட இந்த ஷா ஆலாம் ரயில் சேவை மற்றும் அதன் இணைப்புப் பேருந்துகளில் பொதுமக்கள் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு முற்றிலும் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



