Last Updated:
துளசிமதி முருகேசன் இந்திய விளையாட்டு வரலாற்றிலேயே இதுவரை யாரும் எட்டாத ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்
சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவிற்கும், குறிப்பாக தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில், பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசன் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார்.
அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் நடைபெற்ற பிரிட்டிஷ்-ஐரிஷ் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்ற அவர், தனது அசாத்திய திறமையால் பதக்கங்களை அள்ளியுள்ளார்.
இந்தத் தொடரில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய துளசிமதி முருகேசன், தலா ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச அளவில் விளையாடும் முன்னணி வீராங்கனைகளுக்குக் கடுமையான சவாலை அளித்து, பதக்க மேடைகளில் தனது இடத்தை அவர் உறுதி செய்துள்ளார். இவருடைய இந்த அசுரத்தனமான ஆட்டமும், அடுத்தடுத்து பதக்கங்களை வெல்லும் உத்வேகமும் விளையாட்டு விமர்சகர்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த வெற்றியின் மூலம் துளசிமதி முருகேசன் இந்திய விளையாட்டு வரலாற்றிலேயே இதுவரை யாரும் எட்டாத ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இரண்டு சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி, ஒட்டுமொத்தமாக 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்ற ஒரே இந்தியர் என்ற வரலாற்றுப் பெருமையையும், அரிய சாதனையையும் அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.


