ரூ. 5800 மில்லியன் வற் வரியை செலுத்த தவறிய டபிள்யூ. எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு எதிரான வழக்கு கொழும்பு மேலதிக நீதிபதி ஒஷத மிகார மகாராச்சியின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நேற்றையதினம்(26), வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
அதன்போது, எந்தவித காரணமும் கூறாமல் ஏய்க்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ. 5800 மில்லியன் வற் வரியை, டபிள்யூ. எம். மெண்டிஸ் மற்றும் நிறுவனத்தின் பணிப்பாளர்களை உடனடியாகச் செலுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றின் அதிரடி உத்தரவு
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளருக்காக முன்னிலையான சட்டத்தரணி தினேஷ் பெரேரா, வரி செலுத்தும் காலம் கடந்துவிட்டதாலும், பெரும் தொகை வரி ஏய்க்கப்பட்டு நிலுவையில் உள்ளதாலும், பிரதிவாதிக்கு மேலும் சலுகைகள் வழங்குவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட மேலதிக நீதவான், பிரதிவாதி நிறுவனம் வரிகளைச் செலுத்துவதற்கான காலக்கெடுவை மீறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட வரிகளை உடனடியாகச் செலுத்துமாறும், வரிகளை மீண்டும் தாமதமின்றிச் செலுத்துவார்களா இல்லையா என்பது குறித்த உண்மைகளை அடுத்த நீதிமன்றத் திகதியில் முன்வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பின்னர், இந்த வழக்கை செப்டம்பர் (30) அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

