
முன்னாள் அநுராதபுர அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர், சிறுமி ஒருவரைப் பாரதூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்டு வரும் விசாரணைகளை, சட்டமா அதிபர் திணைக்களம் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாகச் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி கேஷானி விஜயசிங்க அநுராதபுர பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அநுராதபுர பிரதான நீதவான் சியபத் சசிந்து விக்கிரமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று (26) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முதல் முறையாக ஆஜரான அரச சட்டத்தரணி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வழக்கு விசாரணையின் போது, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து நீதவான், நிட்டம்புவ தலைமையக பொலிஸாரிடம் வினவினார். அதற்குப் பதிலளித்த நிட்டம்புவ தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.எம். அனுர குணவர்தன, “சம்பவம் தொடர்பான முதல் டி.என்.ஏ. (DNA) அறிக்கை ஏற்கனவே கிடைத்துள்ளது; இரண்டாவது அறிக்கை விரைவில் கிடைக்கவுள்ளது” எனத் தெரிவித்தார்.
மேலும், சந்தேகநபரான தேரர், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சிறுமியின் தாயின் கையடக்கத் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் பெறப்பட்டு, அவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மற்றொரு திகதியை வழங்குமாறும் அவர் நீதிமன்றத்திடம் கோரினார்.
சந்தேகநபரான பல்லேகம ஹேமரதன தேரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ, “இந்த வழக்கு தற்போது விசாரணை நிலையிலேயே இருப்பதால், விசேட சமர்ப்பணங்களைச் செய்ய விரும்பவில்லை. விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிக்கை செய்ய பொலிஸார் கோரியுள்ள திகதியை வழங்க நாங்கள் இணங்குகிறோம்” எனத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமியைப் பராமரிக்கும் நன்னடத்தை அதிகாரி நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், “சிறுமி தற்போது உளவள ஆலோசனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நன்னடத்தை திணைக்களத்தின் பாதுகாப்பில் மிகவும் பாதுகாப்பாக உள்ளார்” என்று குறிப்பிட்டார்.
சிறுமி தற்போது எந்த இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பதை வெளிப்படுத்த நன்னடத்தை அதிகாரி முற்பட்டபோது, அந்த இடத்தின் இரகசியத்தைப் பாதுகாக்கும் வகையில், அதனைத் தெரிவிக்க வேண்டாம் எனப் பிரதான நீதவான் அவருக்கு அறிவுறுத்தினார்.

