யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கிச் செல்லும் பாதயாத்திரைக் குழுவினருடன், கடந்த 35 நாட்களாகப் பயணித்து வரும் ‘சுப்ரமணியன்’ எனப் பெயரிடப்பட்ட நாய், தற்போது சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
முல்லைத்தீவு, முள்ளியவளை, தண்ணீரூற்று பகுதியில் வைத்துத் தானாகவே பாதயாத்திரை குழுவினருடன் இணைந்து கொண்ட இந்த நாய், இதுவரை சுமார் 35 நாட்களாகப் பயணத்தை தொடர்ந்து வருகிறது. இது குறித்துக் குழுவின் தலைவர் ஜெயாவேல் சாமி கூறுகையில், “இறைவனின் சித்தமாகவே இந்த நாய் எங்களோடு இணைந்தது. கழுத்தில் பட்டுக்கட்டி, நெற்றியில் விபூதி, சந்தனம் இட்டு இதனை நாங்கள் முருகனின் தூதனாகவே அழைத்து வருகிறோம். வழியெங்கும் நாங்கள் உண்ணும் சைவ உணவை மட்டுமே இது உண்பது வியப்பிற்குரியது” என்றார்.
திருகோணமலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது, அங்கேயே விட்டுவிடலாம் என்று குழுவினர் நினைத்த அடுத்த கணமே, அந்த நாய் மீண்டும் அவர்களுடன் இணைந்து முன்னால் வழிகாட்டியாக செல்லத் தொடங்கியுள்ளது.
இயல்பாகவே மாமிச உணவு உண்ணும் தன்மையுள்ள நாய், கடந்த 35 நாட்களாக முழுக்க முழுக்க சைவ உணவுகளை மட்டும் உட்கொண்டு, ஆயிரக்கணக்கான மைல்கள் பக்தர்களுடன் இணைந்து பயணிப்பது பக்தர்களை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. முருகப்பெருமானின் வேடன் கோலத்தின்போது வேட்டை நாய்கள் உடனிருந்ததாகப் புராணங்கள் கூறுவதை நினைவுபடுத்தும் வகையில், இந்த ‘சுப்ரமணியன்’ பக்தர்களின் அரோகரா முழக்கங்களுக்கு இடையே ஒரு வழிகாட்டியாகப் பயணித்து வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வி.ரி.சகாதேவராஜா



