தெல்தெனியவில் கார் ஒன்றினுக்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நுவரெலிய காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கை நேற்று (24-06-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்லேகல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேக நபரும், அவரது 35 வயதுடைய மனைவியும் வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
விசேட பிரிவு
யாழ்ப்பாணத்தில் வலான மோசடித் தடுப்புப் பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தநிலையில் கொலை தொடர்பான மேலதிக விசாரணைக்காகச் சந்தேகநபர்கள், நேற்று இரவு வலான மோசடித் தடுப்புப் பிரிவினரால் நுவரெலியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்தவரும் அவரது நண்பருமான குண்டசாலை பிரதேச சபையைச் சேர்ந்த சாரதி ஒருவர், நுவரெலியா காவல்துறையினரின் விசேட பிரிவினால் குண்டசாலை பகுதியில் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகள்
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று (25-06-2026) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டு கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேச உதவி காவல்துறை அத்தியட்சகர் சந்தன பஸ்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் நுவரெலியா காவல் நிலையம் கொண்டுவரப்பட்ட போது படுகொலை செய்யப்பட்ட இயன்முறை சிகிச்சையாளரின் குடும்ப உறவினர்கள் குழுவும் அங்கு வருகை தந்திருந்தது.
சடலத்தைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட காரும் சந்தேக நபரை ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |





