தங்கம் விக்கிற விலைக்கு.. பழைய நகைகளை கொடுத்து புதிதாக மாற்றும் மக்கள்! டிரெண்டாகும் புது கலாச்சாரம்!
2025-ஆம் ஆண்டு மே மாதம் வரை 1 கிராம் தங்கம் ரூ.8000-த்திற்குள் விற்பனையானது. ஆனால் 2026-ஆம் ஆண்டில் ரூ.15,000-த்தை கடந்து விற்பனை செய்யப்பட்டது. இப்படியே விலை ஏற்றமும் இறக்கமுமாகத் தான் இருந்து வருகிறது. இதனால் நகை பிரியர்கள் புதிய நகைகளை யோசித்து வாங்கத் தொடங்கியுள்ளனர். மாறாக நகைக்கடைகளில் ஒரு புதிய ட்ரெண்ட் உருவாகியுள்ளது.
அது வேறொன்றுமில்லை.. மக்கள் பழைய நகையை கொடுத்து புதிய நகைகளாக மாற்றும் வழக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சந்தை நிலவரங்களை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது பழைய நகைகளை எக்சேஞ்ச் செய்து புதிய நகைகளாக வாங்குவோரின் எண்ணிக்கை 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர் விலை உயர்வால் மந்தமாக இருந்த நகை வியாபாரத்தை உண்மையிலேயே இந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மாற்றி அமைத்திருக்கிறது.
இந்தியன் அசோசியேஷன் ஃபார் கோல்டு எக்ஸலன்ஸ் அண்ட் ஸ்டாண்டர்ட்ஸ் (IAGES) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி கௌஷலேந்திர சின்ஹா, டைம்ஸ் நவ் செய்திக்கு ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் தற்போது மக்கள் பழைய தங்கத்தை கொடுத்து புதிய டிசைன்களாக வாங்க தொடங்கியுள்ளனர். இது ஒரு வகையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவை வெகுவாக குறைக்கும். நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் அரசுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நகையை எக்சேஞ்ச் செய்பவர்களுக்கு சின்ஹா ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார். நகைகளை மாற்றும் போது நகைக்கடைக்காரரின் நம்பகத்தன்மையை மக்கள் உறுதி செய்ய வேண்டும். விலையில் வெளிப்படை தன்மை இருக்கும் பட்சத்தில் அந்த கடைகளில் மட்டுமே எக்ஸ்சேஞ்ச் செய்ய வேண்டும். அப்போதுதான் நம் பழைய தங்கத்திற்கான உண்மையான மதிப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதிகம் எக்சேஞ்ச் செய்வது யார் தெரியுமா?: தற்போதைய சூழலில் தங்களுடைய பழைய நகைகளை அதிகம் எக்சேஞ்ச் செய்பவர்களில் 35 வயதை கடந்த நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நகையை வாங்கி அதை வீட்டு லாக்கரிலோ அல்லது பீரோவிலோ பூட்டி வைத்து வந்த மக்கள், இப்போது புதிய டிரெண்டுக்கு மாறி தங்களுடைய பழைய நகைகளை மாற்றி வருகின்றனர்.
