Last Updated:
ஈரானின் தலைமைப் பயிற்சியாளர் அமீர் கலேனோய், இந்த உலகக் கோப்பையிலேயே தனது அணிதான் “மிகவும் ஒடுக்கப்பட்ட அணி” என்று கவலை தெரிவித்திருந்தார்.
2026 பிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்காவின் சீட்டிலில் (Seattle) நடைபெறவிருக்கும் மிக முக்கியமான லீக் போட்டிக்கு முன்னதாக, ஈரான் தேசிய கால்பந்து அணிக்கு அமெரிக்கா தற்காலிக பயண விதிவிலக்கு அளித்துள்ளது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய நிம்மதியையும், ஊக்கத்தையும் தந்துள்ளது.
அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் புதிய அறிவிப்பின்படி, ஜூன் 26 அன்று சீட்டிலில் நடைபெறவுள்ள ஈரானின் மூன்றாவது லீக் போட்டிக்கு முன்னதாக, அந்த அணி போட்டி நடக்கும் இடத்திற்கு 2 நாட்களுக்கு முன்பாகவே அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த விதிகளின்படி, போட்டி தொடங்குவதற்கு வெறும் 24 மணி நேரத்திற்கு (1 நாள்) முன்பு மட்டுமே ஈரான் அணிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த ஒரு நாள் கூடுதல் கால அவகாசம், ஈரான் அணி தங்களை போட்டிக்கு தயார்படுத்திக் கொள்ள பெரிதும் உதவும். இருப்பினும், பாதுகாப்பு நெறிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், போட்டி முடிந்த அன்றைய தினமே ஈரான் அணி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.
ஈரான் அணி தனது பயிற்சி முகாமைக் மெக்சிகோவின் டிஜுவானா பகுதியில் அமைத்துள்ளது. தங்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, நியூசிலாந்துக்கு எதிரான தங்களின் முதல் போட்டிக்குப் பிறகு பேசிய ஈரானின் தலைமைப் பயிற்சியாளர் அமீர் கலேனோய், இந்த உலகக் கோப்பையிலேயே தனது அணிதான் “மிகவும் ஒடுக்கப்பட்ட அணி” என்று கவலை தெரிவித்திருந்தார்.
ஈரான் கால்பந்து கூட்டமைப்பு மற்றும் அணியின் கேப்டன் அலிரேசா ஜஹான்பக்ஷ் ஆகியோரும் இந்த விவகாரத்தில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். உலகக் கோப்பையில் பங்கேற்கும் மற்ற 47 அணிகளைப் போலவே தங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று கோரியுள்ள ஈரான் கால்பந்து கூட்டமைப்பு, இது குறித்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பிடம் (FIFA) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
மறுபுறம், ஈரானை எதிர்கொள்ளவிருக்கும் எகிப்து அணியும் இதுபோன்ற பயணச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. சீட்டில் உள்ளூர் அதிகாரிகள் எகிப்து அணி போட்டிக்குப் பிறகு அங்கு தங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்துள்ளனர். இதனால் எகிப்து அணி ஸ்போகேன் பகுதிக்குத் திரும்பி, பின்னர் மீண்டும் ஈரானுடனான போட்டிக்கு சீட்டில் வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.


