Last Updated:
ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்து கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கப்பல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருந்த 11 சரக்குக் கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் நீரிணையைக் கடந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், பாரசீக வளைகுடா பகுதியில் இன்னும் 10 இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் நிலைகொண்டுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஊடகத் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், சர்வதேச அளவில் மிக முக்கியமான இந்த கடல்வழிப் பாதையில் இந்தியக் கப்பல்களின் நடமாட்டம் குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அதன்படி, தற்போதைய நிலவரப்படி பாரசீக வளைகுடா பகுதியில் 10 இந்தியக் கொடி ஏந்திய கப்பல்கள் தங்கியுள்ளன. இந்தியாவின் இந்தப் பகுதியிலிருந்து பாரசீக வளைகுடா பகுதிக்குள் மேலும் இரண்டு இந்தியக் கப்பல்கள் நுழைந்துள்ளன. இருநாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து, இந்தியாவை நோக்கி வரும் 11 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் வெற்றிகரமாகக் கடந்து வந்துள்ளன.
உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஹார்முஸ் நீரிணை மிக முக்கியப் பங்கு வகிப்பதால், அங்குள்ள கப்பல் போக்குவரத்து நிலைமையை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நிலவி வந்த பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் கடந்த வாரம் எட்டப்பட்ட இந்த 60 நாட்கள் கால அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டது. எனினும், லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, கடந்த சனிக்கிழமையன்று இந்த கடல்வழிப் பாதையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்ததால் தற்காலிகமாக ஒரு நிச்சயமற்ற சூழல் நிலவியது.
இருப்பினும், இத்தகைய சவால்களுக்கு மத்தியிலும் அண்மைநாட்களாக ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் போக்குவரத்து கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கப்பல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
பதற்றத்திற்கு மத்தியிலும் கெத்து காட்டும் இந்தியா! ஹார்முஸ் எல்லையைக் கடந்த 11 இந்தியக் கப்பல்கள்…


