நாட்டின் கல்வி வரலாற்றில் தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில், மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று ‘மடானி தளவாடப் பொருளுதவி’ மற்றும் ‘கல்வி மடானி’ திட்டங்களை உத்வேகத்துடன் தொடங்கி வைத்தார். கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் முன்னிலையில், ஜோகூர் பாரு, ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டத் தொடக்க விழா, இந்திய சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளது.மொத்தம் 20.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில், நாடு முழுவதும் உள்ள 50,000 தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்தும் இந்தத் திட்டங்கள், பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் சமத்துவக் கொள்கைக்குச் சான்றாக அமைந்துள்ளன.
*வசதியான கற்றல் சூழலுக்கான ‘மடானி தளவாடப் பொருளுதவி’:-*
இந்தத் திட்டத்தின் கீழ், 12.8 மில்லியன் ரிங்கிட் செலவில் நாடு முழுவதும் உள்ள 361 அரசு உதவி பெறும் தமிழ்ப்பள்ளிகள் புதிய பொலிவு பெறுகின்றன. இதன் மூலம் 39,692 மாணவர்கள் மற்றும் 5,290 ஆசிரியர்கள் நேரடியாகப் பயனடைகின்றனர். வகுப்பறைக்கான மேசைகள், நாற்காலிகள், கரும்பலகைகள், கணினி மேசைகள் மற்றும் மின்விசிறிகள் என, கல்வி அமைச்சின் தரநிர்ணயத்திற்கு உட்பட்ட நவீன உபகரணங்கள் வழங்கப்படுவது, பள்ளிகளில் கற்றல் சூழலை மேலும் உற்சாகமானதாகவும், வசதியானதாகவும் மாற்றும்.


*பி40 மாணவர்களின் கல்வி மேன்மைக்கு வலுச் சேர்க்கும் ‘கல்வி மடானி’:-*
மறுபுறம், 8 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் ‘கல்வி மடானி’ திட்டம், 315 தமிழ்ப்பள்ளிகளில் உள்ள பி40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 10,410 மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துகிறது. பள்ளி நேரத்திற்குப் பிறகு தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய நான்கு முக்கிய பாடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதுடன், சத்தான மதிய உணவு, கற்றல் உபகரணங்கள் அடங்கிய ‘கிட்’ மற்றும் பள்ளிகளின் நிர்வாகத்தைச் சீரமைக்கத் தேவையான ‘டிஜிட்டல்’ சாதனங்களும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.
*’டிஜிட்டல்’ புரட்சியை நோக்கி: இரண்டு முக்கிய அதிரடி அறிவிப்புகள்:-*
இந்த நிகழ்வின் உச்சகட்டமாக, மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் மேலும் இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.முதலாவதாக, இவ்வாண்டுக்கான மித்ரா வரவு-செலவுத் திட்டத்தின் கீழ், பல்கலைக்கழகம், மெட்ரிகுலேஷன் மற்றும் பவுண்டேஷன் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக 5,000 நவீன புத்தம் புதிய மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.கடந்த ஆண்டைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தொடரும் இந்த ‘டிஜிட்டல்’ உதவி, உயர்கல்வி மாணவர்களின் கற்றல் தடைகளை உடைத்தெறியும்.இரண்டாவதாக, தமிழ்ப்பள்ளிகளின் ‘டிஜிட்டல்’ வகுப்பறை கனவை நனவாக்கும் வகையில், கடந்த ஆண்டு நிதிப்பற்றாக்குறையால் விநியோகிக்கப்படாமல் இருந்த எஞ்சிய 140 பள்ளிகளுக்கு இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் ‘திறன் பலகைகள்’ (Smart Boards) வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.ஏற்கனவே 388 பள்ளிகளில் இந்தத் தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள பள்ளிகளுக்கும் இந்த அதிநவீன வசதியை உறுதி செய்தது மடானி அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை மித்ரா தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் பின்னர் ஊடகங்களுக்கு அளித்த காணொளி வாயிலாக உறுதிப்படுத்தினார்.


*கல்வியே முன்னேற்றத்தின் திறவுகோல்:-*
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் ரமணன், “கல்வி என்பது ஒரு சமூகத்தின் முதுகெலும்பு. தரமான மனித மூலதனத்தை உருவாக்குவதே மடானி அரசாங்கத்தின் இலக்கு,” என்று உறுதிபடக் கூறினார்.இந்திய சமூகத்தின் கல்வித் தேவைகளை அறிந்து, அதைச் சரியான நேரத்தில் பூர்த்தி செய்ய மித்ரா தொடர்ந்து முனைப்புடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்தத் திட்டங்கள் இந்திய சமூகத்தின் எதிர்காலத் தலைமுறையினரைத் தயார்படுத்தும் ஒரு மாபெரும் சமூகப் புரட்சி என்பதில் ஐயமில்லை.



