கோலாலம்பூர்:
மலேசியாவில் 700-க்கும் மேற்பட்ட சாலைப் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அதிகபட்ச அபராதத் தொகையை (Maximum Compound) 500 ரிங்கிட்டாக (RM500) உயர்த்துவதற்குப் போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்கான 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் (சட்டம் 333) மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் இந்த புதிய அபராத வீதம் அமலுக்கு வரும்.
இன்று தொடங்கி வரும் ஜூலை 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 15-ஆவது நாடாளுமன்றத்தின் 5-ஆவது கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டத்தில், இந்த சாலைப் போக்குவரத்து (திருத்த) மசோதா முதலாம் வாசிப்பிற்காகத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தற்போது, சாலைப் போக்குவரத்து வாரியம் (JPJ) மற்றும் அரச மலேசியக் காவல்துறை (PDRM) ஆகியவற்றால் விதிக்கப்படும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகம், முறையான ஓட்டுநர் உரிமம் அல்லது சாலை வரி (Road Tax) இன்றி வாகனம் ஓட்டுதல் மற்றும் சிவப்பு விளக்கை மதிக்காமல் செல்லுதல் போன்ற குற்றங்களுக்கான அதிகபட்ச அபராதம் RM300 ஆக மட்டுமே உள்ளது.
இருப்பினும், தற்போதைய அபராத வீதங்கள் போதியதாக இல்லாததால், பல வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை அலட்சியப்படுத்துவதோடு, தொடர் விதிமீறல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே இந்த அபராத உயர்வுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
வாகன உரிமம் (பிரிவு 14, 15), முறையான ஓட்டுநர் உரிமமின்றி வாகனம் ஓட்டுதல் (பிரிவு 26), கட்டாய மூன்றாம் தரப்பு காப்பீடு (பிரிவு 40), வாகனப் பரிசோதனை (பிரிவு 59), வாகனப் பதிவு எண் முறைகேடுகள் (பிரிவு 66A), சட்டவிரோத வாகன நிறுத்தம் (பிரிவு 72) மற்றும் போக்குவரத்து சிக்னல்களை மதிக்காமை (பிரிவு 79) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த அபராத உயர்வு அமையும் எனத் தெரியவந்துள்ளது.
இருப்பினும், அனைத்துக் குற்றங்களுக்கும் ஒட்டுமொத்தமாக RM500 அபராதம் விதிக்கப்படாது என்றும், 700-க்கும் மேற்பட்ட குற்றங்களின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப அபராத வீதங்களை JPJ மறுசீரமைப்பு செய்யும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோத பந்தயங்களில் ஈடுபடும் ‘மாட் ரெம்பிட்’ (Mat Rempit) கும்பல் மற்றும் அதிகாரிகளின் கண்காணிப்பை உளவு பார்க்கும் ‘தொந்தோ’ (Tonto) கும்பல்களை ஒடுக்குவதற்கும் இச்சட்டத்திருத்தத்தில் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய பிரிவு 42A: பொதுச் சாலைகளில் சட்டவிரோத பந்தயம் மற்றும் அதிவேகச் சோதனைகளில் ஈடுபடுவோரை, அவர்கள் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிப்பது கண்டறியப்பட்டால், வாரண்ட் இன்றியே உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த இந்த புதிய பிரிவு வழிவகை செய்கிறது.
பிரிவு 110B (திருத்தம்): பந்தயங்களை வேடிக்கை பார்க்கக் கூடுதல், சாலைகளை மறிப்பது, அதிகப்படியான ஒலியெழுப்பி சைலன்சர்களை இயக்குவது போன்ற ‘தொந்தோ’ மற்றும் பந்தயக் கும்பல்களின் செயல்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. விதிகளை மீறுவோரின் வாகனங்களைப் பறிமுதல் செய்யவும், கனமான அபராதம், சிறைத்தண்டனை மற்றும் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொதுச் சாலைகளில் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற மைக்ரோமொபிலிட்டி வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் புதிய விதிகள் கொண்டுவரப்படவுள்ளன. இதன்படி, இந்த வாகனங்களுக்கான பிரத்யேகப் பாதைகள், வேகக் கட்டுப்பாடு மற்றும் குறைந்தபட்ச வயது வரம்பு ஆகியவை நிர்ணயிக்கப்படவுள்ளன. விதிகளை மீறும் பயனர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் இத்திருத்தம் வழிவகை செய்கிறது.



