சவுதியை துவம்சம் செய்தது ஸ்பெய்ன்

உலகக் கிண்ண கால்பந்தாட்ட திருவிழாவிற்கு அதிகாரபூர்வமாக வரவேற்கிறோம் என மிரட்டல் வருகை கொடுத்துள்ளார் 18 வயது இளம் சூப்பர் ஸ்டார் லமீன் யமால். தற்போது முடிவுக்கு வந்த விறுவிறுப்பான போட்டியில் சவுதி அரேபியாவை 4-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் அணி நொறுக்கி அள்ளியது.
10ஆவது நிமிடத்தில் மின்னல் வேக கோல்: வரலாற்றுப் பட்டியலில் யமால்!
முந்தைய போட்டியில் கேப் வேர்ட் அணியுடன் 0-0 என சமன் செய்து அதிர்ச்சியளித்த ஸ்பெய்ன் அணிக்கு, இப்போட்டியில் தொடக்கமே அதிரடியாக அமைந்தது.
அட்லாண்டா மைதானத்தில் போட்டி தொடங்கிய 10ஆவது நிமிடத்திலேயே மைக்கேல் ஒயர்ஸபல் தாழ்வாகக் கொடுத்த பந்தை, லமீன் யமால் மிக நேர்த்தியாக கோல் கம்பத்துக்குள் தள்ளி மாஸ் காட்டினார்.
இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் மிக இளம் வயதில் கோல் அடித்த 8-வது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை யமால் படைத்தார்.
லியனல் மெஸ்ஸி, கிலியான் மப்பே, எர்லிங் ஹலாண்ட் மற்றும் ஹரி கேன் ஆகியோர் ஏற்கனவே உலகக் கிண்ணத்தில் கோல் வேட்டையைத் தொடங்கியுள்ள நிலையில், இப்போது பார்சிலோனாவின் மகனான யமாலும் அந்தப் பட்டாளத்தில் இணைந்துள்ளார்.
காயத்திலிருந்து மீண்டு வந்து மாஸ் காட்டிய இளம்புயல்
2024 யூரோ கிண்ணத்தை 16 வயதிலேயே ஸ்பெய்னுக்கு வென்று கொடுத்து, மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக கால்பந்து உலகின் அடுத்த முகமாகப் பார்க்கப்படுபவர் யமால். ஆனால், தொடைப் பகுதி காயம் காரணமாக இத்தொடரில் அவர் விளையாடுவது சந்தேகமாக இருந்தது.
முதல் போட்டியில் மாற்று வீரராக களம் புகுந்தவர், சவுதிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கி, சவுதி அணியின் தடுப்பாட்டத்தை ஒற்றை ஆளாகச் சிதறடித்தார். அவர் கோல் அடித்ததும் மைதானமே அதிரும் வகையில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.
முதல் பாதியிலேயே முடிந்த ஆட்டம்: ஒயர்ஸபல் அதிரடி!
யமாலின் கோல் கொடுத்த உத்வேகத்தில், ஸ்பெய்ன் அணி முதல் பாதியிலேயே சவுதி அணியை நிலைகுலையச் செய்தது.
முதல் போட்டியில் விமர்சனத்திற்குள்ளான ஒயர்ஸபல், யமாலின் கோலுக்கு உதவிசெய்தது மட்டுமின்றி, 21 மற்றும் 24-வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு உலகத்தரம் வாய்ந்த கோல்களை அடித்து அசத்தினார்.
முதல் பாதியிலேயே ஸ்பெய்ன் 3-0 என அசுர முன்னிலை பெற்றதால், பயிற்சியாளர் லூயிஸ் டி லா புவென்டே, இரண்டாம் பாதியில் யமால் மற்றும் ஒயர்ஸபல் இருவருக்குமே ஓய்வளித்து வெளியே அழைத்தார்.
2010-க்கு பின் கம்பேக் கொடுக்குமா ஸ்பெய்ன்?
இரண்டாம் பாதி தொடங்கிய 4 நிமிடங்களில், மார்க் குகுரெல்லா அடித்த உதை சவுதி வீரர் ஹசன் அல்தம்பக்தி மீது பட்டு ஓவ்ண்-கோலாக மாற, ஸ்பெயின் 4-0 என கம்பீரமாக வென்றது.
2010ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்ற பிறகு, விலகல் முறையிலான சுற்றைத் தாண்ட முடியாமல் தவித்து வந்த ஸ்பெய்ன் அணிக்கு, யமாலின் இந்த வருகை மற்றும் அசுரத்தனமான ஃபார்ம் மீண்டும் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவதற்கான மாபெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது.

