ஜோகூர் பாரு:
மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், தங்களின் சுயநல அரசியல் சதுரங்க ஆட்டத்திற்குள் அரச நிறுவனங்களை (Royal Institution) இழுக்க வேண்டாம் என அரசியல் தலைவர்களுக்குப் PKR கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் போட்டிகள் எப்போதுமே நேர்மையுடன் நடத்தப்பட வேண்டும் என்றும், ஒரு தலைவருக்காக மற்றொரு தரப்பை பகடைக்காயாகப் பயன்படுத்தி அரசியல் போர்களை நடத்துவது முறையல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று இங்குள்ள செத்தியா துரோபிகா மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘கர்னிவல் லிண்டுங் கெர்ஜாயா மதானி’ (Karnival Lindung Kerjaya Madani) நிகழ்வைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாம் களத்தில் இறங்கிப் போராட நினைத்தால், அதில் நேர்மையும் துணிச்சலும் இருக்க வேண்டும். உங்களுக்கு சண்டையிட விருப்பமிருந்தால் நீங்களாகவே நேரடியாகக் களமிறங்கி மோத வேண்டும்; நமக்காகப் பேசுவதற்குப் பிறரைத் தூண்டிவிடக் கூடாது.
சொந்தப் போர்களைத் தலைவர்களே எதிர்கொள்வதுதான் உண்மையான நேர்மை அரசியல். உங்களால் நேரடியாகப் போராட முடியாவிட்டால், உங்கள் கட்சியின் தலைவரை நேரடியாகக் களமிறங்குமாறு கேளுங்கள். அதைவிடுத்து, திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு மற்றவர்களைப் பகடைக்காயாக்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் அரச குடும்பத்தினரை இழுத்து அரசியல் ரீதியான தாக்குதல்களைத் தொடுப்பது முற்றிலும் தவறான செயலாகும் என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்தார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன், அண்மைய அரசியல் நகர்வுகளைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஜோகூர் இளவரசர் (Regent of Johor) துங்கு மக்கோத்தா இஸ்மாயில் விமர்சிக்கப்படுவது தனக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாகக் குறிப்பிட்டார். “இது மிகவும் தவறானது. சமூக வலைத்தளங்களில் ஜோகூர் இளவரசர் இலக்கு வைக்கப்படுவதைக் கண்டு நான் ஏமாற்றமும் கவலையும் அடைகிறேன். இந்த விவகாரங்களுக்கும் அரச நிறுவனத்திற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
முன்னதாக, ஜோகூர் இளவரசர் துங்கு மக்கோத்தா இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம், மூவாரில் நடைபெற்ற ஒரு விவாதக் கூட்டத்தில் (Podcast) இடைக்கால ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹபீஸ் காசியுடன் கலந்துகொண்டார். அப்போது கூட்டாட்சி மற்றும் மாநில அரசுகள் சார்ந்த சில முக்கியப் பிரச்சனைகள் மற்றும் மாநிலத்திற்கான வரி வருவாயைத் திரும்பப் பெறுவது குறித்தும் இளவரசர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



