Last Updated:
இந்திய நுகர்வோருக்கு மிகக் குறைந்த விலையில், அதே சமயம் உலகத் தரத்திலான பொருட்களை வழங்குவதே முதன்மை இலக்கு – இஷா அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 49-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் (AGM) உரையாற்றிய ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் இயக்குனர் இஷா அம்பானி, எஃப்எம்சிஜி (FMCG – நுகர்வோர் பொருட்கள்) துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில் பிரம்மாண்ட முதலீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் நுகர்வோர் பொருட்கள் நிறுவனத்தின் (RCPL) உற்பத்தித் திறனை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 30,000 கோடி முதலீட்டில் ஆசியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த “ஃபுட் பார்க்” நெட்வொர்க்கை உருவாக்க ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த அதிநவீன உணவுப் பூங்காக்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் (Robotics) தொழில்நுட்பங்கள் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளன.
இதன் மூலம் பிஸ்கட், சாக்லேட், மளிகைப் பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் மிக அதிநவீன ஆட்டோமேஷன் வசதிகளுடன் தயாரிக்கப்படவுள்ளன.
ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் நுகர்வோர் பொருட்கள் பிரிவான RCPL, 2025-26 (FY26) நிதியாண்டில் ரூ. 22,000 கோடி மொத்த வருவாயை ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இதன் மூலம் இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் எஃப்எம்சிஜி நிறுவனமாக ரிலையன்ஸ் உருவெடுத்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே ரூ. 10,000 கோடியை உற்பத்தி உள்கட்டமைப்பில் முதலீடு செய்துள்ளதுடன், இந்தியாவின் 12 மாநிலங்களில் Beverages உற்பத்தி பிரிவுகள் பரந்து விரிந்துள்ளன.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதன்மை குளிர்பான பிராண்டான காம்பா (Campa), நிதியாண்டு 2026-ல் மட்டும் ரூ. 4,700 கோடிக்கும் மேல் மொத்த விற்பனையை பதிவு செய்து அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் தற்போது ஏற்றுமதி மற்றும் ஃபிரான்ச்சைஸ் விற்பனை மூலம் உலகளவில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கின்றன. இந்திய நுகர்வோருக்கு மிகக் குறைந்த விலையில், அதே சமயம் உலகத் தரத்திலான பொருட்களை வழங்குவதே தங்களின் முதன்மை இலக்கு என்று இஷா அம்பானி இந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய AI மற்றும் ரோபாட்டிக்ஸ் உணவுப் பூங்காக்கள்! இஷா அம்பானி அதிரடி அறிவிப்பு..


