Last Updated:
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய டெலிகாம் துறையில் ஒரு புதிய ஏஐ (AI) புரட்சியை ஏற்படுத்த உள்ளது. அதன்படி, சாதாரண போன் கால்களிலேயே செயற்கை நுண்ணறிவை இணைத்து, மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்க ஜியோ முடிவு செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஏஜிஎம் 2026 நேரலை நிகழ்வில், ஜியோவின் புதிய அறிவிப்புகள் பலவும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. அதில் குறிப்பாக இந்த நிகழ்வில் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாமின் தலைவரும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் நிர்வாக இயக்குநருமான ஆகாஷ் அம்பானி ‘ஜியோ கால் ஏஜென்ட்’ என்ற புதிய ஏஐ குரல் உதவியாளரை அறிமுகம் செய்தது, பல தரப்பிலிருந்தும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த சேவையின் மூலம், சாதாரண போன் கால்களிலேயே செயற்கை நுண்ணறிவை இணைத்து, மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்க ஜியோ முடிவு செய்துள்ளது.
ஜியோ கால் ஏஜென்ட்டின் எப்படி வேலை செய்கிறது?
ஜியோ கால் ஏஜென்ட் என்பது வாய்ஸ் கால்களிலேயே வேலை செய்யும் ஒரு தனிநபர் ஏஐ உதவியாளர் ஆகும். அதாவது, இந்த சேவையைப் பயன்படுத்த தனியாக எந்த செயலியையும் தரவிறக்கம் செய்யத் தேவையில்லை; கூடுதல் போன் நம்பரும் தேவையில்லை. ஜியோ நெட்வொர்க்கில் நேரடியாகச் செயல்படும் இந்த ஏஐ சேவை அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என்றும், இது அனைத்து இந்திய மொழிகளையும் ஆதரிக்கும் என்றும் ஆகாஷ் அம்பானி கூறி உள்ளார்.
பயனர்கள் வெறும் “ஹே ஜியோ” (Hey Jio) என்று கூறுவதன் மூலம் இந்த ஏஐ (AI) உதவியாளரை இயக்க முடியும். பயனரின் அனுமதியோடு இது போன் கால்களில் இணைந்து அவர்களுக்கு உதவி செய்யும். இந்த ஏஐ முகவர், கால்கள் பேசப்பட்டு கொண்டிருக்கும் போதே, நிஜ நேரத்தில் (Real-time) அந்த உரையாடல்களை எழுத்து வடிவில் மாற்றும் திறன் கொண்டவை. மேலும், ஒரு கான்ஃபெரன்ஸ் காலில் அதிகபட்சமாக 10 வெவ்வேறு நபர்களின் குரல்களை இது துல்லியமாக அடையாளம் காணும்.
ஆகாஷ் அம்பானி
என்னென்ன வேலைகளை இது செய்யும்?
கால்கள் முடிந்த பிறகு, பேசிய விஷயங்களின் சுருக்கம், செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியல் மற்றும் நினைவூட்டல்களை உருவாக்கி, காலில் இருந்த அனைவருக்கும் இது பகிர்ந்து கொள்ளும். லைவ் காலில் இருக்கும் போதே இந்த ஏஐ உதவியாளரால் சில வேலைகளையும் செய்ய முடியும். உதாரணமாக, உணவு ஆர்டர் செய்வது, கேப் புக் செய்வது, உணவகத்தில் டேபிள் ரிசர்வ் செய்வது மற்றும் மீட்டிங்குகளை திட்டமிடுவது போன்ற பல வேலைகளை இது செய்யும்.
எப்போது வழக்கத்துக்கு வருகிறது இச்சேவை? யாரெல்லாம் இதனால் பயனடையலாம்?
ஜியோ நெட்வொர்க்கில் இருக்கும் 500 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் இந்த சேவை கிடைக்க உள்ளது. இதுபற்றி பேசுகையில் “நாம் உருவாக்குவது இந்தியாவிற்கான ஏஐ, இந்தியாவின் மூலமாக உருவாகும் ஏஐ, இது ஒரு நாள் உலகிற்கே சேவை செய்யும்” என்று ஆகாஷ் அம்பானி கூறினார். மேலும் 2030-க்குள் ஏஐ சேவைகளை இந்தியர்கள் அனைவருக்கும் குறைந்த விலையில் வழங்க ஜியோ இலக்கு வைத்துள்ளது. மட்டுமன்றி, இந்தியா முழுவதும் ஏஐ சேவையை கொண்டு சேர்க்க ஜியோ நிறுவனம் இதனை அனைத்து இந்திய மொழிகளிலும் உருவாக்கி வருகிறது.
ஆகாஷ் அம்பானி
ஜியோ நிறுவனம் தினமும் சுமார் 20 பில்லியன் நிமிட வாய்ஸ் கால்களைக் கையாள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் உலகிலேயே மிக அதிக கால்களைக் கையாளும் நிறுவனங்களில் ஒன்றாக ஜியோ உள்ளது. இதை குறிப்பிட்டு, “இந்தியா இங்குதான் (ஜியோவில்) வாழ்கிறது, சிந்திக்கிறது, வேலை செய்கிறது மற்றும் இணைகிறது” என்று ஆகாஷ் அம்பானி ஜியோவின் வளர்ச்சியைப் பற்றிக் கூறினார். ஜியோவின் இந்த வளர்ச்சியை, இந்த புதிய ஜியோ கால் ஏஜென்ட் தொழில்நுட்பம் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என எதிர்ப்பார்க்கிறது.
RIL AGM 2026 | ஏஐ தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டம்… ரியல்-டைம் கால்-ஏஜெண்ட்.. ஆகாஷ் அம்பானி முக்கிய அறிவிப்பு!


