கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது மேலும் மூன்று கொலைச் சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தகவல் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
2008 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்ற ஐந்து பேரின் துப்பாக்கிச் சூட்டு கொலைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நீண்டகால விசாரணைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் பாதுகாப்பின் கீழ் சிவனேசத்துரை சந்திரகாந்தன் என அழைக்கப்படும் பிள்ளையான் செய்ததாக கருதப்படும் பல கொலைகளே இவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
பிள்ளையானின் திட்டங்கள்
கடந்த ஜூன் 15 அன்று, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையன் மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த உண்மைகளைத் தெரிவித்துள்ளது.

விசாரணையில், இது பிள்ளையானின் அதிஉச்ச கோபத்தினால் இடம்பெற்ற பழிவாங்கல் சம்பவமாக இருக்கலாம் என சில சாட்சிகள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1. 2008 ஜனவரி 9 ஆம் திகதி மட்டக்களப்பு கல்லடி முருகன் கோயில் அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் சக்தி மற்றும் ரமேஷ் ஆகியோர் T-56 துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்.
2. 2008 மே 22 ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில் சாந்தன் மற்றும் அவரது பாதுகாவலர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்.
3. 2008 ஒகஸ்ட் 20 ஆம் திகதி வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கன்னன்குடா பகுதியில் தர்மலிங்கம் (பொடியார்) என்பவர் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஆகியவை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
5 கொலை சம்பவங்கள்
இது தொடர்பாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் டி-56 ரக துப்பாக்கிகளால் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்ட தொடர் சம்பவங்கள் தொடர்பாக, பிள்ளையன் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உண்மை விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் 2008-ல் நடந்த கொலை தொடர்பாக நீண்ட விசாரணைக்குப் பிறகு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகளின்படி, இந்த சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்ட கொலையானது, மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில், 2008 ஜனவரி 09 அன்று டி-56 ரக துப்பாக்கியால் சக்தி மற்றும் ரமேஷ் ஆகிய இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
2008 மே 22 அன்று, காத்தான்குடி எல்லைக்குட்பட்ட பிரதான வீதியில் உள்ள செய்னி மௌலானா மசூதிக்கு அருகே சாந்தன் மற்றும் அவரது மெய்க்காப்பாளர் கொல்லப்பட்டார்.
இதன்படி சாந்தன் என்பவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலைச் சம்பவத்தை தானே மேற்கொண்டதாக ஒரு கூட்டத்தில் கூறியதையடுத்து ஏற்பட்ட விரோதத்தின் காரணமாக சாந்தன் கொலை நடத்தப்பட்டதாகவும் CID நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வவுணதீவு (Vavunathivu) காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட, கண்ணங்குடாவில், அழகத்துரை தர்மலிங்கம் (பொடியார்) என்பவர் இரவில் ஆயுதமேந்திய குழுவினரால் அவரது வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் குற்றச்செயல்கள் தொடர்பாக, இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் 32ஆம் பிரிவுடன் இணைந்த 102, 113 (ஆ), 296 ஆகிய பிரிவுகளின் கீழும், 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 2(1)(அ), 3 மற்றும் 5(அ) ஆகிய பிரிவுகளின் கீழும் சந்தேகநபர்கள் பாரிய குற்றங்களைப் புரிந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
இந்த வழக்குகளுடன் தொடர்புடையதாக மூவர் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் சந்தேகநபரான ராசிக் முகம்மது பாயிஸ் என்றழைக்கப்படும் “பொலிஸ் பாயிஸ்”, விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் முன்னரே தனது குடும்பத்தினருடன் இலங்கையை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதவானிடம் வழங்கப்பட்ட சுய ஒப்புதல்
வாக்காளர் பதிவேட்டிலிருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் ஊடாக திறந்த பிடியாணை (Open Warrant) பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, ஏனைய இரு சந்தேகநபர்களும் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களாவர்.
அவர்கள் 2025 ஒகஸ்ட் 13 மற்றும் நவம்பர் 13 ஆம் திகதிகளில் கைது செய்யப்பட்டு, பாதுகாப்பு அமைச்சரின் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கொலைச் சம்பவங்களில் பிரதான துப்பாக்கிச் சூட்டாளர்களாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் ஹமீத் லெப்பை முகம்மது ஷஹீட் மற்றும் அப்துல் காதர் முகம்மது சிபான் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் கடந்த 15 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இந்த ஐந்து கொலைச் சம்பவங்களிலும் மூன்றாவது சந்தேகநபராக, குற்றங்களைத் திட்டமிட்டு வழிநடத்தியதாக குற்றச்சாட்டு எதிர்நோக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பெயரிடப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ். ரவீந்திரநாத் கொலைச் சம்பவம் தொடர்பாக, சிறப்பு விசாரணைப் பிரிவினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் தற்போது வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் அடுத்த தவணையில் சந்தேகநபரான பிள்ளையானை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பிரதம நீதவான், வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர்களுக்கு எதிராக, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 127ஆம் பிரிவின் கீழ் கோட்டை நீதவானிடம் வழங்கப்பட்ட சுய ஒப்புதல் வாக்குமூலங்களுக்கு மேலாக, பல சாட்சியாளர்களால் வழங்கப்பட்ட வலுவான சாட்சியங்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
மேலதிக விசாரணை
மேலும், பிள்ளையானின் அரசியல் நடவடிக்கைகளுக்காக “பொலிஸ் பாயிஸ்” உட்பட 17 பேர் கொண்ட ஆயுதக் குழுவொன்று பயன்படுத்தப்பட்டதாகவும், அந்தக் குழு மக்களை அச்சுறுத்துதல், கப்பம் வசூலித்தல் மற்றும் பிள்ளையானுக்கு எதிராக இருந்தவர்களை கொலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைபின் புலனாய்வு பிரிவு உறுப்பினரான எம். ஹுசைன்(CID அறிக்கையின்படி) தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என்பதும் இதன்போது தெரியவந்துள்ளது.

தர்மலிங்கம் கொலை, கல்லடி முருகன் கோயில் அருகே இடம்பெற்ற இரட்டைக் கொலை மற்றும் சாந்தன் கொலை ஆகியவற்றை இந்த ஆயுதக் குழுவினர் மேற்கொண்டதை தாம் நேரில் கண்டதாக அவர் சாட்சியம் அளித்ததாக விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளது.
மேலும், 2006 ஆம் ஆண்டில் “பொலிஸ் பாயிஸ்” ஊடாக இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு T-56 ரக துப்பாக்கிகள் பெற்றதாக எம். ரிஸ்வான் என்பவரும் சாட்சியம் வழங்கியுள்ளார்.
பிள்ளையானின் உத்தரவின் பேரில் இந்தக் குழு பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக, அவரது கீழ் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஏ. எஸ். கன்னா என்பவரும் உறுதிப்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்படுவதற்காக பிள்ளையான், சாந்தனுக்கு உத்தரவிட்டதாக, சிறையில் இருந்தபோது “பிரதீப் மாஸ்டர்” என்பவரிடம் பிள்ளையான் கூறியதாக என். ஜெகதீஸ்வரன் வழங்கிய வாக்குமூலமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பாரிய கொலைச் சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பான வலையமைப்பு குறித்து இராணுவப் புலனாய்வு இயக்குநரகத்திடமிருந்தும், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திடமிருந்தும் அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

