Last Updated:
ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா, துருக்கி, இங்கிலாந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகமும் நாடுகளும் சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சிறார்களின் வாழ்க்கை முறை மற்றும் மனநிலை கடுமையாகப் பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இதனால், சிறார்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரபு நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகத் தளங்களில் கணக்குகள் தொடங்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சமூக ஊடகத் தளங்கள், 15 வயதுக்குட்பட்டவர்களின் கணக்குகளை நீக்குவதற்கு 12 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகம்
சிறார்களின் மனநலம், இணையவழி துன்புறுத்தல், அடிமையாக்கும் நடத்தைகள், உடல் உழைப்பு இன்மை குறித்த கவலைகளால், இந்த நடவடிக்கைக்கு அமீரகத்தின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, இணையவழிச் செயல்பாடுகளுக்கு அமீரகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடையை மீறும் கணக்குகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தோனேசியா, மலேசியா, துருக்கி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது கவனிக்கத்தக்கது.

