2026–2030 காலப்பகுதிக்கான தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தைச் (NEDP) சிறப்பாக நடைமுறைப்படுத்துவது குறித்தும், ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்காகச் சுங்கத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீனமயப்படுத்தல் பணிகள் குறித்தும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் புதன்கிழமை(17) ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் கீழ் இயங்கும் வருமான நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயப்படுத்தல் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கலந்துரையாடலில் பின்வரும் முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன:
- ஏற்றுமதி வசதிகள்: ஏற்றுமதி கொள்கலன்களைப் பரிசோதிக்கும் ‘Export Facilitation Centre’ இன் கொள்ளளவை அதிகரிப்பதுடன், ஏற்றுமதியாளர்களுக்கு இலகுவான சூழலை உருவாக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் இலங்கை சுங்கத்திற்குப் பணிப்புரை விடுத்தார்.
- சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள்: ஏற்றுமதித் துறையில் இதுவரை ஈடுபடாத சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை உள்ளடக்குவதற்காக, ‘TIEP’ (Temporary Import for Export Processing) செயல்முறையை மீளாய்வு செய்வதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
- பரவலாக்கம்: சுங்க நடவடிக்கைகளைப் பரவலாக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் புதிய சுங்க ஏற்றுமதி மத்திய நிலையமொன்றை நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
- மின்னணு வர்த்தகம் (e-commerce): மின்னணு வர்த்தகம் மூலம் ஏற்றுமதி செய்வதில் உள்ள தடைகளை நீக்கத் தபால் திணைக்களத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவும், இதற்கான ஆவணங்களைத் டிஜிட்டல் மயப்படுத்தி நேரத்தையும் செலவையும் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
- அபாய மதிப்பீடு: ஏற்றுமதியாளர்களின் அபாய மதிப்பீட்டின் அடிப்படையில், குறைந்த அபாயங்களைக் கொண்ட ஏற்றுமதியாளர்களுக்குக் கூடுதல் வசதிகளை வழங்கும் நடைமுறையைச் செயல்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, 2030-ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற ஏற்றுமதி வருமான இலக்கை எட்டுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மாதந்தோறும் மீளாய்வு செய்வதற்கும், ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கும் சுங்கம், ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணைந்து செயற்படவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சுங்கப் பணிப்பாளர் நாயகம் விமல் லியனகம, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


