India
oi-Vigneshkumar
டேராடூன்: டெல்லியில் வசித்து வரும் தம்பதி டேராடூன்க்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அந்த தம்பதி விடுதியில் தங்கியிருந்த நிலையில், அந்தப் பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாகவே திருமணத்திற்கு பிறகு செல்லும் ஹனிமூன் பலரது வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு பயணமாக இருக்கும். ஆனால் சமீப காலங்களாக ஹனிமூன் போது நடக்கும் சில பகீர் சம்பவங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது.

மீண்டும் அப்படி ஒரு பகிர் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், ஹனிமூன் சென்ற டெல்லியைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
யார் அந்தப் பெண்?
உயிரிழந்த பெண்ணின் பெயர் ராதா காயத்ரி (27). இவர் டெல்லியின் கித்வாய் நகர் கிழக்கு பகுதியில் வசித்து வந்தார். குருகிராமில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். இவரும் இவரது கணவர் சௌம்யா ஸ்ரீசரனும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். ஸ்ரீசரனும் ஐடி துறையில் புனேவில் பணியாற்றி வருகிறார்.
ராதா காயத்ரி மற்றும் ஸ்ரீசரன் ஆகிய இருவருக்கும் கடந்த 2025 நவம்பர் 8ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. அவர்கள் ஹனிமூன் சென்றபோதே இந்த துயரம் நடந்துள்ளது.
ஹனிமூன்
கடந்த ஜூன் 13ம் தேதி இந்த தம்பதியினர் டெல்லியில் இருந்து ரிஷிகேஷிற்கு சென்றனர். மறுநாள் அதாவது ஜூன் 14ஆம் தேதி, இரவு சுமார் 11:30 மணியளவில் முசோரியில் உள்ள ‘திப்ரிதார்’ பகுதியில் அமைந்துள்ள ‘கியானா ஹோம்ஸ்டே’ என்ற விடுதிக்கு சென்று, அங்கு ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.
அதிர்ச்சி
அன்று என்ன நடந்தது என்பது தொடர்பாக கணவர் ஸ்ரீசரன் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்திருந்தார். அதாவது அன்று இரவு தம்பதியினர் இருவரும் மது அருந்தியுள்ளனர். அதிகாலை 3:30 மணியளவில் இருவரும் உறங்கச் சென்றுள்ளனர். மறுநாள் காலை ஸ்ரீசரன் எழுந்து பார்த்தபோது, தனது மனைவி ராதா காயத்ரி ஆடைகளின்றி, அசைவற்ற நிலையில் தரையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 108 ஆம்புலன்ஸ் உடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு போலீசார் சென்று பார்த்த போது ராதா காயத்ரி ஆடைகளின்றி தரையில் கிடந்துள்ளார். அவர் சிறுநீர் கழித்த நிலையில் இருந்ததாகவும், அவரது மூக்கிலிருந்து ரத்தம் வழிந்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அப்போது அவரை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அவர்கள் தங்கியிருந்த அறையில் படுக்கை விரிப்பில் ரத்தக் கறைகள் காணப்பட்டன. மேலும், இரண்டு காலி மது பாட்டில்கள் மற்றும் உணவுப் பொருட்கள் அங்கிருந்து மீட்கப்பட்டன.
போலீஸ் விசாரணை
ராதா காயத்ரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக டேராடூனில் உள்ள கோரனேஷன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகு மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் முசோரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

