2024 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால், அவர் கடும் ஏமாற்றம் அடைந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மைதானத்தில் வைத்து, லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பேசியதும் சர்ச்சையானது.
இருப்பினும், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் கே.எல்.ராகுல் இந்த சீசனில் 3 அரைசதங்கள் உள்பட 13 போட்டிகளில் 465 ரன்களை எடுத்து, 136.36 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். இருப்பினும், அவர் உலகக் கோப்பை தொடரில் இடம்பெறாதது விரக்தியை கொடுத்திருக்கலாம் என்று கூறும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உதவி பயிற்சியாளர் லான்ஸ் குளூஸ்னர், போட்டியின்போது அவர் இயல்பாக விளையாட அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பல நேரங்களில் அணியை சரிவிலிருந்து மீட்டு, வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு கே.எல்.ராகுலிடம் இருந்ததாகவும், அதனால் அவர் நிதானமாக விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாகவே, அவர் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை என்றும் கூறினார்.
சூழ்நிலையை கருத்தில் கொண்டு விளையாடிய கே.எல்.ராகுல், இந்த சீசனில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளதாகவும், கேப்டன் பொறுப்பில் இருந்து அவரது பங்குக்கு ரன்களை சேர்த்தாலும், பிற வீரர்கள் பெரிதாக கைகொடுக்காதது அவருக்கு பெரும் சுமையாக இருந்ததாகவும் லான்ஸ் குளூஸ்னர் குறிப்பிட்டார். மேலும், சக வீரர்களும், நிர்வாகிகளும் அவர் மீது நல்ல மரியாதை வைத்திருப்பதாகவும், அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை என்றும் லான்ஸ் குளூஸ்னர் கூறியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)