உங்களுக்கே தெரியாம உங்க பான் கார்டை வைத்து லோன் வாங்கிடுவாங்க! மறந்தும் இதை செய்யாதீங்க! உஷார்!
இந்தியாவில் நிதி சார்ந்த விஷயங்கள் அனைத்திற்கும் பான் கார்டு தேவைப்படுகிறது. வங்கி கணக்கு திறப்பது முதல் முதலீட்டு திட்டங்களில் சேமிப்பது வரை, இந்த ஒரு கார்டை தான் ஊழியர்கள் கேட்கின்றனர். இப்படி முக்கியமான அடையாள ஆவணமாக இருப்பதால் உங்களுடைய விவரங்களை திருடி அனுமதியில்லாமலேயே உங்கள் பெயரில் மோசடிக்காரர்கள் போலி கணக்குகளை உருவாக்க வாய்ப்புள்ளது, இதனால் எதிர்காலத்தில் ஏற்படும் வரி பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழலும் ஏற்படலாம், வங்கிகள் பல கட்ட சரிபார்ப்புகளை செய்தாலும்.. ஒரு சில நேரங்களில் இது போன்ற மோசடிகள் நடந்து விடுகின்றன. எனவே மக்கள் இதிலிருந்து ஜாக்கிரதையாக இருப்பது முக்கியம்.
வங்கி சேவைகள்: புதிய அக்கவுண்ட் தொடங்குவதற்கு, அதிக அளவிலான பண பரிவர்த்தனை செய்வதற்கு, வருமான வரி செலுத்துவதற்கு பான் கார்டு கட்டாயமாகும். ஒருவேளை உங்களுடைய பான் கார்டை பயன்படுத்தி யாராவது போலியாக பேங்க் அக்கவுண்ட் தொடங்கினால் அதன் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு நீங்களே பொறுப்பு. எனவே இது போன்ற நேரங்களில் சாதுரியமாக நடந்து கொள்வது அவசியம்.
போலி அக்கவுண்ட்டை கண்டறிவது எப்படி?:
கிரெடிட் ரிப்போர்ட்டை சரிபார்த்தல்: உங்களுடைய பான் கார்டைப் பயன்படுத்தி வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய சிபில் ரிப்போர்ட்டை சரிபார்க்கலாம். இதில் உங்கள் பெயரில் நடந்த அனைத்து பரிவர்த்தனைகளும் பட்டியலிடப்பட்டிருக்கும். அதில் நீங்கள் செய்த பரிவர்த்தனை எது? என்பது உங்களுக்கே தெரியும். அதை தவிர வேறு ஏதேனும் பரிவர்த்தனைகள் நடந்திருந்தால் உங்கள் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று அர்த்தம்.

வருமான வரி கணக்கை சரிபார்த்தல்: உங்கள் வருமான வரி கணக்கை ஃபார்ம் 26ஏஎஸ் அல்லது ஆனுவல் இன்ஃபர்மேஷன் ஸ்டேட்மென்ட்டை வைத்து சரி பார்த்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் பான் கார்டு மூலம் நடந்திருக்கும் அனைத்து பரிவர்த்தனை விவரங்களும் இருக்கும். இதில் உங்களுக்குத் தெரியாத பரிவர்த்தனை இருந்தால் உடனடியாக அது குறித்து விசாரிக்க வேண்டும்.
அது மட்டுமல்ல உங்களுக்கே தெரியாமல் உங்கள் அக்கவுண்ட்டை வைத்து லோன் பெற்று விடுவார்கள் .இதனால் வரும் காலத்தில் யாரோ பெற்ற கடனுக்கு நீங்கள் பொறுப்பாகும் சூழலும் ஏற்படலாம்.
பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டதற்கான அறிகுறிகள்: வருமானவரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வந்தாலோ அல்லது நீங்கள் செய்யாத முதலீட்டுக்கு அறிவிப்புகள் வந்தாலோ உஷாராக இருக்க வேண்டியது அவசியம். அதேபோல உங்களுக்கு சம்பந்தம் இல்லாத வங்கி கணக்குகள் அல்லது நிதி பரிவர்த்தனைகள் குறித்து வங்கிகளிடமிருந்தே கடிதங்கள் அல்லது எஸ்எம்எஸ் வரலாம். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.
தப்பிப்பது எப்படி?: இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க.. தெரியாத நபர்களிடம் பான் கார்டு விபரங்களை பகிராமல் இருங்கள். பிற வேலைகளுக்காக பான் கார்டு ஜெராக்ஸ் எடுத்திருந்தால் அதை அப்படியே கீழே போட்டு விடாமல் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இதுபோன்ற சிறு சிறு விஷயங்களை செய்தாலே பெரிய மோசடிகளில் இருந்து எளிதில் தப்பித்து விடலாம்.

