Business
oi-Prasanna Venkatesh
இந்தியாவில் தொழில் முதலீடுகள், ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் துறையில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு மற்றும் குஜராத் இடையேயான போட்டி புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
ஒரு புறம், 2035-36-க்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை முதலமைச்சர் விஜய் முன்வைத்துள்ள நிலையில், மறுபுறம் குஜராத் அரசு 2047-க்குள் 3.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உருவாக்கும் மாபெரும் திட்டத்துடன் புதிய தொழிற்துறை கொள்கையை அறிவித்துள்ளது.

தற்போது சுமார் 425 பில்லியன் டாலர் பொருளாதார மதிப்பைக் கொண்ட தமிழ்நாடு, இந்தியாவின் முன்னணி தொழில்துறை மாநிலமாக கருதப்படுகிறது. ஆனால் 349 பில்லியன் டாலர் பொருளாதார அளவைக் கொண்ட குஜராத், அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கான வளர்ச்சி வரைபடத்தை வெளியிட்டு முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரூ.10 லட்சம் கோடி முதலீட்டை குறிவைக்கும் குஜராத்
காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், “விக்சித் குஜராத் தொழிற்துறை கொள்கை 2026″யை அறிமுகப்படுத்தினார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்ப்பதே இந்த கொள்கையின் முக்கிய நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிறுவனங்களுக்கு தேவையான, முதலீட்டாளர் நட்பு மற்றும் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற தொழில் சூழலை உருவாக்குவது தான் இந்த கொள்கையின் மையக் கருத்தாக உள்ளது. குறிப்பாக குஜராத்தை உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையமாக மாற்றுவது முக்கிய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குஜராத் அரசு.
தமிழ்நாடு பின்பற்றிய பாதையில் குஜராத்?
கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழ்நாடு வாகன உற்பத்தி, மின்னணு உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் திறமையான மனிதவளத்தை மையமாக வைத்து வளர்ச்சி கண்டது. தற்போது அதேபோல உயர்தர தொழில்நுட்பம், ஆராய்ச்சி மையங்கள், புதுமை அதாவது இன்னோவேஷன் சார்ந்த தொழில்கள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களை இலக்காக வைத்து குஜராத் தனது அடுத்த கட்ட வளர்ச்சி திட்டத்தை வடிவமைத்துள்ளது.
இந்த கொள்கையின் மூலம் ஒவ்வொரு மாவட்டமும், தாலுக்காவும் பொருளாதார வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும் என குஜராத் அரசு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களின் வளர்ச்சிக்கா சிப்காட், டைடல் பார்க் ஆகியவை அமைக்கும் பணிகள் துவங்கி பலன் அளிக்க துவங்கியுள்ளது.
இதே மாடலை தற்போது குஜராத்தும் கையில் எடுத்துள்ளது.
பொருளாதாரம் வர்த்தக வளர்ச்சியை 2ஆம், 3ஆம் நிலை நகரங்களுக்கு விரிவாக்குவது மூலம் நகர நெரிசலை குறைத்து புதிய தொழில் மையங்களை உருவாக்க முடியும், இதன் மூலம் சிறு நகரங்களில் இருக்கும் மக்களுக்கு கூட அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்பு கிடைத்து அவர்களின் வாழ்க்கை தரம் வேகமாக உயரும். இதனால் நகரங்கள் மற்றும் கிராமங்களுக்குமான இடைவெளி குறையும்.
R&D மையங்களுக்கு சிறப்பு சலுகைகள்
உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் இன்னோவேஷன் நிறுவனங்களை ஈர்க்க குஜராத் அரசு பல்வேறு ஊக்கத் திட்டங்களை அறிவித்துள்ளது. புதிய ஆராய்ச்சி மையங்கள் அமைக்கும் நிறுவனங்களுக்கு கட்டிடம், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கான முதலீட்டில் 50 சதவீதம் வரை மூலதன மானியம் வழங்கப்படும்.
அதோடு நிலம் வாங்குவதற்கான செலவில் 25 சதவீதம் வரை திருப்பிச் செலுத்தும் வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆராய்ச்சி மையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊதிய மானியம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும். காப்புரிமை பதிவு செலவுகளுக்கும் அரசு ஆதரவு வழங்குகிறது.
மின்சார கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு ரூ.1 மானியமும் ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்பட உள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சிறப்பு ஆதரவு
புதிய ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க குஜராத் அரசு தனிப்பட்ட திட்டங்களையும் அறிவித்துள்ளது. ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு மாதாந்திர வாழ்வாதார உதவித்தொகை, சீடிங் முதலீட்டு ஆதரவு மற்றும் வட்டி மானியம் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
பெண்கள் இணை நிறுவனர் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கூடுதல் உதவித்தொகை வழங்கப்படும். பெண்கள் தொழில் முனைவோர்களுக்கு அலுவலக வாடகையில் 75 சதவீதம் வரை மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.10,000 கோடி முதலீட்டுக்கு தனி வகை
இந்த புதிய தொழிற் கொள்கையின் முக்கிய அம்சமாக “அல்ட்ரா-மேகா” தொழில் திட்டங்கள் என்ற புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.10,000 கோடி முதலீடு செய்து 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டங்கள் இந்த பிரிவில் சேர்க்கப்படும்.
இத்தகைய திட்டங்களுக்கு முதலீட்டு மானியம், வட்டி சலுகை மற்றும் மின்சார கட்டண ஆதரவு உள்ளிட்ட பல்வேறு ஊக்கங்கள் வழங்கப்படுகின்றன.
MSME துறைக்கும் உலகளாவிய இலக்கு
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும் உலக சந்தையை நோக்கி நகர்த்த குஜராத் முயற்சி மேற்கொண்டுள்ளது. புதிய வரையறைகளின் அடிப்படையில் MSME நிறுவனங்களுக்கு மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் மின்சார கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இதன் மூலம் ஏற்றுமதி திறன் கொண்ட புதிய தொழில்கள் உருவாகும் என குஜராத் அரசு நம்புகிறது.
தமிழ்நாடு – குஜராத் போட்டி தீவிரமா?
இந்தியாவில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் போட்டியில் தமிழ்நாடு மற்றும் குஜராத் பல ஆண்டுகளாக நேரடி போட்டியாளர்களாக இருந்து வருகின்றன. மின்னணு உற்பத்தி, வாகனத் தொழில், ஏற்றுமதி மற்றும் உலகளாவிய நிறுவனங்களை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கும் நிலையில், புதிய தொழிற்துறை கொள்கையின் மூலம் குஜராத் தனது வளர்ச்சி வேகத்தை மேலும் அதிகரிக்க முயல்கிறது.
2035-36-க்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி நகரும் தமிழ்நாட்டுக்கும், 2047-க்குள் 3.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை குறிவைக்கும் குஜராத்துக்கும் இடையிலான இந்த வளர்ச்சி போட்டி, அடுத்த பத்தாண்டுகளில் இந்திய தொழில்துறை வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய போட்டியாக மாறும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.




