இந்திய ஏற்றுமதியாளர்கள் செலுத்திய கூடுதல் சுங்க வரியான ரூ.95 ஆயிரம் கோடியைத் திருப்பித் தரும் பணியில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது.
சர்வதேச அவசரப் பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ், அமெரிக்காவுடன் அதிக வர்த்தக உபரியைக் கொண்ட நாடுகளைக் குறிவைத்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுங்கவரி நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டது.
இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு மாதம் 7-ம் தேதி முதல் இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி பொருட்களுக்கு 25 சதவீத பரஸ்பர சுங்கவரி விதிக்கப்பட்டது.
பின்னர் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைக் காரணம்காட்டி ஆகஸ்டு 27-ம் தேதி மேலும் 25 சதவீதம் விதிக்கப்பட்டது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் 50 சதவீதம் வரை கூடுதல் சுங்கவரி சுமையை எதிர்கொண்டனர்.

சுங்கவரி விதிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, பிப்ரவரி மாதம் 20-ம் தேதி அந்த வரிகளை அரசியலமைப்புக்கு முரணானவை என்று அறிவித்து உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக வசூலிக்கப்பட்ட தொகையை ஏற்றுமதியாளர்களுக்குத் திருப்பி வழங்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான விரிவான நிர்வாக வழிமுறைகளை அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

