கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சு. ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தனின் (பிள்ளையான்) விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மற்றும் பல மனிதக் கொலைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் எனக் கூறப்படும் இருவர் ஆகியோரை எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று(15.06.2026) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், பிள்ளையான் கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
ரவீந்திரநாத் கொலை
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சு. ரவீந்திரநாத் 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் மீது சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், மட்டக்களப்பு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து முக்கிய மனிதக் கொலைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் கண்டறியப்பட்டதாக CID தெரிவித்துள்ளது.
அவற்றில் 2006ஆம் ஆண்டு கல்லடியில் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், கப்பம் கோரப்பட்ட பணத்தை வழங்க மறுத்த வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம், கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளின் பின்னணியில் TMVP உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்டவை அடங்குவதாக கூறப்படுகிறது.
இந்த வழக்குகளுடன் தொடர்புடையவர்களாகக் கூறப்படும் காத்தான்குடியைச் சேர்ந்த முகமது சிபான் மற்றும் முகமது சகீத் ஆகியோரும் CIDயினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூவருக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முன்னேற்றம் தொடர்பான விசேட அறிக்கை திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பாதுகாப்பு காரணங்கள்
பாதுகாப்பு காரணங்களால் பிள்ளையானை நேரில் நீதிமன்றத்திற்கு அழைத்து வர முடியவில்லை என CID தெரிவித்ததையடுத்து, அவர் இணையவழி (Zoom) மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளில் இணைக்கப்பட்டார்.

மேலும், வழக்குடன் தொடர்புடைய ஒருவரின் மரணம் மற்றும் மற்றொருவர் வெளிநாட்டில் இருப்பது குறித்த தகவல்களும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டன.
வழக்கை பரிசீலித்த நீதவான், பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில், பிள்ளையானின் நெருங்கிய ஆதரவாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இனியபாரதி என அழைக்கப்படும் கே. புஷ்பகுமார் மீது ஏழு மனிதக் கொலைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 2022ஆம் ஆண்டு அக்கரைப்பற்று நீதிமன்ற ஆவணக் காப்பகத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடனும் பிள்ளையான் தரப்பினருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுகளின் பேரிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் பிள்ளையானை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து, மட்டக்களப்பு நீதிமன்ற வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் விசேட அதிரடிப்படை மற்றும் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

